/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பட்டம் மட்டும் வேலை வழங்காது!
/
பட்டம் மட்டும் வேலை வழங்காது!
ஜூலை 02, 2025 12:00 AM
ஜூலை 02, 2025 12:00 AM

இன்று பல புத்தம்புது துறைகள் உருவாகியுள்ள நிலையில், மாணவர்கள் தேர்வு செய்து படிக்க ஏராளமான படிப்புகள் அவர்கள் முன்னே உள்ளன. குறிப்பாக, ஏ.ஐ., டி.எஸ்., மிஷின் லேர்னிங், பாரின்சிக் சயின்ஸ், கிரிமினாலஜி, பயோடெக்., பயோசயின்ஸ் போன்ற துறைகளில் வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.
கணக்கு, இயற்பியல், வேதியியல், மொழியியல் போன்ற பாடங்களை தேர்வு செய்ய பெரும்பாலான மாணவர்கள் தயங்குகின்றனர். வரும்காலங்களில் இத்துறை சார்ந்த பாடங்களை கற்றுக்கொடுக்க திறமையான ஆசிரியர்களுக்கு பஞ்சம் ஏற்படும்.
இவ்வாறு தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், அவற்றில் ஒரு படிப்பை தேர்வு செய்வதில் மாணவர்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது. இத்தருணத்தில் மாணவர்கள் ஒன்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தனக்கான விருப்பமான துறையை, ஆழ்ந்து உணர்ந்து, அதன்படி ஒரு பாடப்பிரிவை தேர்வு வேண்டுமே தவிர, எவர் ஒருவரது ஆதிக்கத்திலும் ஒரு பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்யக்கூடாது. குறிப்பாக, நண்பர்கள் சேர்ந்த படிப்பில் சேர்தல் அல்லது பெற்றோர் வற்புறுத்தும் காரணத்திற்காக ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்தல் என்பது முற்றிலும் தவறானது.
'இண்டஸ்ட்ரி ரெடி' என்பதற்கு ஏற்ப, வேலைக்கு ஏற்ற திறன்களை பணியில் சேரும்போதே பெற்றிருக்க வேண்டும் என்றும், திறம்பட பணியாற்றுவதற்கு தேவையான பயிற்சியை முன்பே பெற்றிருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு தொழில்நிறுவனமும் எதிர்பார்க்கின்றன. ஆகையால், துறைக்கு ஏற்ப தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அத்தகைய திறன்களில் 60 சதவீதம் இன்று கல்வி நிறுவனங்களே கற்றுக்கொடுக்கின்றன. மீதமுள்ள 40 சதவீத திறன்களை மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ள வேண்டும். இன்று பெரும்பாலான நிறுவனங்கள் பகுதிநேர வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, பி.காம்., முடித்து அக்கவுண்டனட் ஆக வேலை செய்ய விரும்புபவர்கள் 'டேலி' எனும் சாப்ட்வேரை கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. அவற்றை கல்லூரியிலேயே கற்றுக்கொண்டாலும், அவற்றில் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனை வளர்த்துக்கொள்ள பகுதிநேர வேலை வாய்ப்பை பெறலாம்.
துறை சார்ந்த வேலை வாய்ப்பு திறன்களோடு, அனைத்து துறையை சேர்ந்தவர்களும் தொடர்பியல் திறனை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். கல்லூரியில் சேர்ந்த நாளே புரொபஷனலாக உணர வேண்டும். கல்வி கற்கும் காலங்களிலேயே, புரொபஷனலாகவே வாழ தொடங்கினால் பின்னாளில் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவது மிக எளிதாக அமையும்.
இன்றைய காலகட்டத்தில், பட்டம் மட்டுமே வேலையை பெற்றுத்தராது. ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ளும் திறன்களே வேலை வாய்ப்பை வழங்கும்; திறன்களை வளர்ப்பதற்கு ஏற்ப வாய்ப்புகள் விரிவடைகின்றன என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
-கே.கிரீசன், தலைவர் சி.எம்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கோவை.