தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நனவாகும் மருத்துவக் கனவு

நனவாகும் மருத்துவக் கனவு

நனவாகும் மருத்துவக் கனவு


மார் 24, 2026 07:00 PM

மார் 24, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

மார் 24, 2026 07:00 PM மார் 24, 2026 07:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது பல மாணவர்களின் கனவு. தற்போதைய நவீன உலகில், மருத்துவக் கட்டமைப்பு என்பது எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளை கடந்து, ஏராளமான புதிய துறைகளையும் அவை சார்ந்த படிப்புகளையும், வாய்ப்புகளையும் வழங்குகிறது.

பார்மசி

மருந்துகளின் தயாரிப்பு, அவற்றின் வேதிப்பண்புகள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பாதுகாப்பாக வழங்குவது குறித்து இந்த படிப்பு கற்பிக்கிறது. மருத்துவமனைகள் மட்டுமின்றி, மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவுகளில் மருந்தாளுநர்களுக்கு எப்போதும் அதிகத் தேவை உள்ளது.

பிசியோதெரபி

விபத்துக்கள், விளையாட்டு காயங்கள் அல்லது பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சிகள் மற்றும் இயன்முறை சிகிச்சைகள் வாயிலாக மறுவாழ்வு அளிப்பது 'பிசியோதெரபிஸ்டு'களின் பணி. இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

நர்சிங்

மருத்துவமனையின் முதுகெலும்பாகச் செவிலியர்கள் திகழ்கின்றனர். நவீன செவிலியர் படிப்பு என்பது வெறும் உதவிப் பணி மட்டுமல்ல; அவசரக்கால சிகிச்சைகள், மருத்துவ மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி என பல பரிமாணங்களை உள்ளடக்கியது. உலகளவில் செவிலியர்களுக்கு எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு.

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம்

நோயைக் கண்டறிவதில் மருத்துவர்களுக்கு மிக முக்கியத் துணையாக இருப்பவர்கள் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள். ரத்தப் பரிசோதனை முதல் உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகள் வரை இவர்களின் பங்களிப்பு நோயறிதலில் மிக அவசியம்.

ஆயுஷ் படிப்புகள்

ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மற்றும் சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் மீது தற்போது மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தப் படிப்புகளை முடிப்பதன் மூலம் மாணவர்கள் சுயமான மருத்துவப் பயிற்சியையோ அல்லது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றவோ முடியும்.

உயிரி மருத்துவப் பொறியியல்

மருத்துவமும், பொறியியலும் இணையும் ஒரு அற்புதமான துறை இது. செயற்கை உறுப்புகள், ஸ்கேனிங் கருவிகள் மற்றும் அறுவை சிகிச்சை ரோபோக்கள் போன்ற நவீன மருத்துவக் கருவிகளை வடிவமைப்பதில் இத்துறை வல்லுநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

கதிரியக்கவியல்

கதிரியக்கவியல் அல்லது ரேடியோகிராபி என்பது எக்ஸ் - ரே, சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ., போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி, மனித உடலின் உட்புறப் பாகங்களைப் படம் பிடித்து நோய்களையும் பாதிப்புகளையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.

கண் மருத்துவம்

'ஆப்டோமெட்ரி' எனப்படும் கண் பரிசோதனைத் துறை, மக்களின் கண் பார்வைத் திறனை ஆய்வு செய்து பார்வைக் குறைபாடுகளுக்குத் தேவையான கண்ணாடி அல்லது 'லென்ஸ்'களைப் பரிந்துரைப்பதோடு, ஒட்டுமொத்த கண் நலனைப் பேணுவதையும் முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளது.

தொழில்முறை சிகிச்சை

உடல் அல்லது மன ரீதியான பாதிப்புகளால் அன்றாட வேலைகளைச் செய்ய இயலாதவர்களுக்கு, அவர்கள் தன்னிச்சையாகச் செயல்படத் தேவையான பயிற்சியையும், வாழ்வியல் மாற்றங்களையும் 'ஆக்குபேஷனல் தெரபி' வழங்குகிறது.

மருத்துவத் துறை என்பது ஒரு மாபெரும் கடல். எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக, மருத்துவக் கனவைக் கைவிடத் தேவையில்லை. சேவை மனப்பான்மையும், அர்ப்பணிப்பும் இருந்தால் இத்துறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்களும் மருத்துவ துறையில் மிளிரலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us