/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அதிக எடை செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
/
அதிக எடை செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
அதிக எடை செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
அதிக எடை செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
நவ 03, 2025 08:36 AM
நவ 03, 2025 08:36 AM

அதிநவீன தகவல் தொழில்நுட்ப சேவைக்கான அதிக எடையுள்ள, 'சி.எம்.எஸ்., - 03' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், அதை புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளனர்.
நம் நாட்டின் தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு போன்ற தேவைகளுக்கான செயற்கைகோள்களை, 'இஸ்ரோ' எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
தகவல் தொடர்பு சேவை
மேலும், வணிக நோக்கத்துக்காக, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும், விண்ணில் நிலை நிறுத்துகிறது. அதன்படி, அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக, 'மல்டி பேண்ட்' வசதிகளுடன் கூடிய, 'சி.எம்.எஸ்., - 03' செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. 1,600 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இந்திய நிலப்பரப்பு மற்றும் பரந்து விரிந்த கடல் பகுதிகளில், தடையற்ற தகவல் தொடர்பு சேவைக்காக வடிவமைக்கப்பட்டது. அதன் எடை 4,410 கிலோ.
இந்நிலையில், 'எல்.வி.எம்., 3 - எம் 5' வகை ராக்கெட் உதவியுடன், சி.எம்.எஸ்., - 03 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இதற்கான, 24 மணி நேர 'கவுன்ட்டவுன்' நவ., 1ம் தேதி மாலை 5:26 மணிக்கு துவங்கியது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, சி.எம்.எஸ்., - 03 செயற்கைக்கோளை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 - எம் 5 ராக்கெட், நவ., 2ம் தேதி மாலை 5:26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பூமியில் இருந்து புறப்பட்ட 16 நிமிடம் 14 வினாடிகளில், தகவல் தொடர்பு சேவைக்கான சி.எம்.எஸ்., - 03 செயற்கைக்கோள், 169 கி.மீ., உயரம் உள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஆயுள் 15 ஆண்டுகள்
இந்த வெற்றி தொடர்பாக, விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:
இஸ்ரோவின் எல்.வி.எம்., 3 - எம் 4 திட்டம், இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. சந்திரயான் - 3 திட்டத்தின் வாயிலாக, நிலவின் தென்துருவத்தில், விண்கலத்தை தரையிறக்கி சாதனை புரிந்தோம்.
'பாகுபலி' எனும், எல்.வி.எம்., 3 - எம் 5 திட்டம் மிகவும் முக்கியமானது. புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் சி.எம்.எஸ்., - 03. இந்த செயற்கைக் கோளில், 'யு.எச்.எப்., - சி, கியூ, எஸ்' போன்ற 'மல்டி பேண்ட்' உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்காக, ராக்கெட்டின் உந்துவிசை திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராக்கெட்டின் மொத்த திறன், 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சி.எம்.எஸ்., - 03 செயற்கைக்கோள், தகவல் தொடர்பு சேவைக்கானது. இந்திய நிலப்பரப்பு மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சேவைகளை வழங்கும்.
மேலும், இந்திய கடற்படை பயன்பாட்டுக்கும் உதவும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்ரோவின் வரலாற்றில் முதல்முறையாக, செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்னும், கிரையோஜெனிக் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வெற்றியும் கிடைத்துள்ளது. இது, மிகப்பெரிய சாதனை. இதன் வாயிலாக, பல செயற்கைக்கோள்களை, ஒரே ராக்கெட்டில் சுமந்து சென்று, பல புவிவட்ட பாதைகளில் நிலைநிறுத்த முடியும். இது, ஒரு புதிய மைல்கல். இவ்வாறு அவர் கூறினார்.
ககன்யான் திட்டத்துக்கு உந்துகோல்
இஸ்ரோவின் எல்.வி.எம்., 3 - எம் 5 ராக்கெட், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக புவிவட்ட பாதையில், 4,000 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட செயற்கைக்கோள்களையே இஸ்ரோ நிலை நிறுத்தி உள்ளது. அதிகளவு எடையுள்ள செயற்கைக்கோள்கள், வெளிநாடுகள் உதவியுடன் விண்ணில் நிறுத்தப்படுகின்றன.
'தற்சார்பு இந்தியா' திட்டத்தை உறுதி செய்யும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன், அதிகளவு எடையுள்ள செயற்கைக்கோளை புவி ஒத்திசைவு பாதைக்கு சுமந்து செல்ல, எல்.வி.எம்., 3 - எம் 5 ராக்கெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அதன் அம்சங்கள்:
* எல்.வி.எம்., 3 ராக்கெட்டின் எஸ் 200 இன்ஜின்
* விகாஸ் இன்ஜின்
* கிரையோஜெனிக் இன்ஜின்
இந்த இயந்திரங்களின் திறன்கள், 10 சதவீதம் அளவுக்கு மேம்படுத்தப்பட்டு உள்ளன. இஸ்ரோவின் இந்த முன்னெடுப்பு, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான், சந்திரயான் - 4 ஆகிய திட்டங்களுக்கு உந்துதலாக அமையும்.

