செப் 28, 2011 12:00 AM
செப் 28, 2011 12:00 AM
இன்றைய பொருளாதார போட்டி உலகில், ஒரு உற்பத்தி நிறுவனத்திற்கு, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த மெட்டீரியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன? அத்துறையின் முக்கியத்துவம் என்ன? அத்துறைக்கான படிப்பு, அவற்றிலுள்ள வேலை வாய்ப்புகள் போன்ற பல அம்சங்களை ஆராய்கிறது இக்கட்டுரை.
மெட்டீரியல் மேனேஜ்மென்ட்
மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களான போர்டு(Ford), எல்.ஜி(LG) மற்றும் செய்ல்(SAIL) போன்றவை, தங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை எவ்வாறு இவ்வளவு பெரிய அளவில், நாடு முழுவதும் மட்டுமில்லாது, வெளிநாடுகளிலும் பல இடங்களில் சேகரித்து வைத்து, தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்துகின்றன என்பது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம். இந்த ஆச்சர்யம்தான், இத்துறைப் பற்றி அறிவதற்கான ஆரம்பப் புள்ளி. இத்துறையானது, பரவலான விநியோக சங்கிலி அமைப்பைக் கொண்டதாகும்.
ஒரு நிறுவனத்தின் பயன்பாட்டுப் பொருட்கள் தொடர்பான அனைத்து அம்சங்களும் இத்துறையின் கீழ் வரும். திட்டமிடுதல் மற்றும் முறைப்படுத்தல், வாங்குதல் அமைப்புகள் மற்றும் நடைமுறை, தரப்படுத்தல் மூலமாக பல்வேறான குறைப்பு நடவடிக்கைகள், தேவை மற்றும் விநியோகத்தில் நிலவும் நிச்சயமின்மைகளை குறைத்தல், கையாளுதல் மற்றும் போக்குவரத்து, ஆய்வுசெய்தல், முறையாக இருப்பு வைத்தல் மற்றும் உள்நிறுவன தேவைகளுக்கு பொருட்களை வழங்குதல், விவரப் பட்டியலை நிர்வகித்தல், விற்பனை மேலாண்மை மற்றும் உடைந்த அல்லது சேதமடைந்தப் பொருட்களை நீக்குதல் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இப்பிரிவில் அடங்கும்.
ஒரு உற்பத்தி நிறுவனத்தில், 40 - 60 சதவிகித செலவினங்கள் பொருட்கள்(Materials) தொடர்பானவை. சிறப்பான மெட்டீரியல் மேலாண்மை மூலம் இந்த செலவினத்தைக் குறைக்கலாம்.
இன்றைய பொருளாதாரத்தில் மெட்டீரியல் மேலாண்மை
நிறுவனங்களுக்கிடையே இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நிலவும் போட்டி, செலவினங்களைக் குறைத்தல் போன்ற அம்சங்களால் மெட்டீரியல் மேலாண்மைத் துறையானது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில், முதலாளித்துவப் பொருளாதாரம் கடந்த 1991ம் ஆண்டில் நுழைவதற்கு முன்பாக, ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை அதிகளவில் வாங்கி, பெரியளவிலான இடத்தில் அதை சேமித்துவைத்து, பணத்தையும், இடத்தையும் முடக்க வேண்டியதில்லை. ஆனால் இன்று ஒரு நிறுவனம் மேற்கூறிய 2 விஷயங்களையும் செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், அதிகப் போட்டியால் நிலைமை மாறிவிட்டது.
மெட்டீரியல் மேலாண்மை துறையில் தொழில்ரீதியான அணுகுமுறை ஏன் தேவையென்றால், உற்பத்தி செயல்பாட்டை சிறப்பாக மாற்றியமைத்தலில் அதன் பங்கு இன்றியமையாதது. இத்துறையை சிறப்பாக மேலாண்மை செய்வதன் மூலமாக, செலவினங்களைக் குறைத்து ஒரு நிறுவனத்திற்கு லாபம் ஏற்படுத்தலாம். முன்பு, இதே துறைதான் ஒரு செலவு மையமாக கருதப்பட்டது.
இத்துறைக்கான மனிதவளத் தேவை
பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், இப்பணிக்கான ஆட்கள் தேவை சிறிதுசிறிதாக அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல், பார்மசூடிகல், எப்எம்சிஜி(FMCG), பாதுகாப்பு, ரயில்வே, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட எப்போதும் உதிரி பாகங்கள் தேவைப்படும் அனைத்து துறைகளிலும், வாங்குதல், இருப்பு வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளில் மெட்டீரியல் மேலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
மெட்டீரியல் மேலாண்மையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தேவை மற்றும் விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக, பார்மா நிறுவனத்தில், மருந்துகள், வெப்பநிலைக் கட்டுப்பாட்டு அறையில், தொடர் கண்காணிப்பில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ரயில்வே துறையை எடுத்துக்கொண்டால், வைப்பு அறைகள் பொறியாளர்களால் மேலாண்மை செய்யப்படும்.
மெட்டீரியல் மேலாண்மை படிப்பு
இத்துறை தொடர்பான பலவித சங்கேத குறிப்புகள் இளையதலைமுறையினர் மத்தியில் உள்ளன. இத்துறையில், பட்ட டிப்ளமோ(Graduate diploma), முதுநிலை டிப்ளமோ(PG diploma), முழு அளவிலான எம்.பி.ஏ ஆகிய படிப்புகள் உள்ளன. இத்துறையில் எம்.பி.ஏ அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
IIMM(Indian Institute of Materials Management) வழங்கும் முதுநிலை டிப்ளமோ போன்ற படிப்புகளை பகுதிநேரப் படிப்பாகவோ அல்லது தொலைநிலைப் படிப்பாகவோ மேற்கொள்ளலாம். IIMM -ல் படிப்பவர்கள் பெரும்பாலானோர் பணிபுரிபவர்கள். பணிபுரிந்துகொண்டே பகுதி நேரப் படிப்பை மேற்கொள்வதானது, பணியின் மீதான அறிவையும், அனுபவத்தையும் கூட்டுகிறது. இத்துறையின் பலவித பிரிவுகள் குறித்து அனுபவசாலிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு, படிப்பின்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருள் விற்பனையாளர்களிடம் பேசுகையில், பேசுபவரது உடல்மொழி(Body Language) மிகவும் முக்கியம். உங்களின் கைகள் அல்லது கண்களில் காணப்படும் பதற்றம், எதிராளியின் மனதில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்திவிடும். இதன்மூலம் உங்களின் நோக்கம் தவறிவிடும் வாய்ப்புகள் ஏராளம். இந்த உடல்மொழி தொடர்பான பயிற்சிகள் ஒரு மெட்டீரியல் மேலாளருக்கு முக்கியம்.
இத்தொழிலுக்குள் நுழைதல்
ஒவ்வொரு நிறுவனமும், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் துறைக்கான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் தனியான விருப்பங்களைக் கொண்டிருக்கும். சில நிறுவனங்கள், தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் தொழில்நுட்பமல்லாத மெட்டீரியல் மேலாண்மை செயல்பாட்டை நன்றாக மேற்கொள்ளும் பொறியியல் பட்டதாரிகளை நியமித்துக் கொள்கின்றன.
அதேசமயம், இந்த இருவகை செயல்பாடுகளையும் திறம்பட மேற்கொள்ளும் தொழில்நுட்பம் சாராத பட்டதாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் பணிகளைப் பெறுகின்றனர். இத்துறையில் ஒருவர் ஆரம்ப நிலையில், மெட்டீரியல் மேலாண்மையில் பயிற்சி பெறுபவராக, பயிற்சிபெறும் எக்ஸ்க்யூடிவ், பொருள் வாங்குதல் அதிகாரி, மெட்டீரியல் மேலாளர் மற்றும் வைப்பறை அதிகாரி போன்ற பணி நிலைகளில் நியமிக்கப்படுகிறார்.
ஒரு மெட்டீரியல் மேலாளர் தனது நிறுவனம் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்திருப்பதோடு, முழு சந்தை நிலவரங்களையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மெட்டீரியல் மேலாளர்கள் என்போர் ஒரு நிறுவனத்தின் சக்தி மையங்களுள் ஒன்றாக இருப்பவர்கள். ஒரு பெரிய நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மதிப்பீட்டில் உதிரி பாகங்கள் வாங்கப்படும்.
இதுதொடர்பாக, சந்தையில் அந்த நிறுவனத்தின் மதிப்பும் சம்பந்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு விதத்தில் சொல்ல வேண்டுமெனில், பல நிறுவனங்கள் தங்களின் பணப்பையை மெட்டீரியல் மேலாளர்களிடம் கொடுத்து, அவர்கள் தினசரி அவற்றை எவ்வாறு திறம்பட செலவு செய்து, நிறுவனத்தின் உற்பத்தி செயல்திட்டத்திற்கு எந்தவகையில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றுகிறார்கள் என்பதை அளவிடுகின்றன.
வணிக வியூகங்கள்
சில இளம் மெட்டீரியல் மேலாளர்கள், தங்களின் பணியானது பொருட்களை வாங்குதல் மற்றும் அவற்றை இருப்பு வைக்கும் நிலையத்தை நிர்வகித்தல் என்ற அளவில் மட்டுமே நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், முழு சந்தை நிலவரத்தை திறம்பட அறிந்துகொள்வதும் அவரின் பணியாகும். சந்தையில் ஒரு சரியான வியாபாரியை கண்டுபிடிக்கவும், சந்தையை முறையாக ஆய்வுசெய்யவும் அவர் சிறந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான வழங்கல், பொருட்களின் தரம் மற்றும் சரியான நேரத்தில் பொருட்களை வழங்கும் திறன் போன்றவை ஒரு வியாபாரியை தேர்ந்தெடுப்பதில் முக்கியமானவை.
மிக அதிகளவிலான பொருட்களை இருப்பு வைத்தலும் தேவையற்றது. அதேசமயம், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பொருட்கள் வழங்குவதில் எந்தவித தாமதமும் ஏற்பட்டுவிடக் கூடாது. நிறுவனம் மற்றும் தகவல்தொடர்பு சம்பந்தமான திறன்களுடன், சிறந்த திட்டமிடுநராகவும், வியூகரீதியில் முடிவெடுப்பவராகவும், நல்ல குழுத் தலைவராகவும் ஒரு மெட்டீரியல் மேலாளர் திகழ்வது அவசியம். எனவே, இந்தப் பணியானது ஒரு சவால் நிறைந்தப் பணி என்று சொன்னால் அது மிகையல்ல.
மெட்டீரியல் மேலாளருடைய பணிகளது சுருக்க விபரங்கள்
* சந்தை மற்றும் பொருட்களின் வழங்கல் அமைப்புகளை பகுப்பாய்வு செய்தல்
* வாங்குதல் துறையின் செலவினங்களை கட்டுப்படுத்தல்
* பொருட்களை வாங்குவதற்கான வியாபாரிகள், பொருட்களை பெறுதல் மற்றும் விற்பனை முறைகளை வகுத்தல்
* சிறந்தப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குதல்
* விநியோகத்திற்கான வாங்குதல் விபரங்களை தயார் செய்தல்
* ஆன்லைன் வாங்குதல் அமைப்பை நிர்வகித்தல்
* மெட்டீரியல் மேலாண்மை தொடர்பான ஆவணங்களை முறையாகப் பராமரித்தல்
* ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்படுதல்
