தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அரசின் புதிய கல்விக் கொள்கை வெற்றிபெறுமா?

அரசின் புதிய கல்விக் கொள்கை வெற்றிபெறுமா?

அரசின் புதிய கல்விக் கொள்கை வெற்றிபெறுமா?


செப் 29, 2011 12:00 AM

செப் 29, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 29, 2011 12:00 AM செப் 29, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக பள்ளிக் கல்வியில் புதிய தேர்வு மற்றும் மதிப்பெண் நடைமுறைகளை உட்புகுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை 3 மணிநேரங்கள் எழுதும் ஒரு தேர்வில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நிச்சயிக்கப்படுவதை நிச்சயம் யாருமே விரும்பமாட்டார்கள். எனவே தமிழக அரசின் புதிய தேர்வு நடைமுறைகளை யாரும் வேண்டாம் என்று சொல்வதற்கில்லை.

இந்த புதிய அறிவிப்பில், மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், பேப்பர்-பேனா தேர்வுகளோடு சேர்த்து, மாணவர்களின் வகுப்பறை செயல்பாடு, ப்ராஜெக்ட்கள், கலந்துரையாடல்கள், வாழ்க்கைத் திறன்கள், கலைத் திறமைகள் மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதுதான். பேப்பர்-பேனா தேர்வுக்கு 60 மதிப்பெண்களும், மேற்குறிப்பிட்ட திறன் மதிப்பீடுகளுக்கு 40 மதிப்பெண்களும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திறன் மதிப்பீட்டு முறை மிகுந்த பாராட்டுக்குறியது என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. மேலும், கல்லூரி கல்விமுறையைப் போல, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு, அந்த 2 வருடங்களையும் சேர்த்து செமஸ்டர் முறை கொண்டு வரும் பரிந்துரையும் போற்றத்தக்கதே. இதன்மூலம் 11ம் வகுப்பு என்றாலே, அது 12ம் வகுப்பு பாடங்களைப் படிப்பதற்குத்தான் மற்றும் அதனால் ஒன்றுமில்லை என்ற பரிதாப நிலை நீங்கும். 12ம் வகுப்பு அரசுத்தேர்வு, பறக்கும் படை, மாணவர்கள் பிடிபட்டனர், கேள்வித்தாள் வெளியாகிவிட்டது போன்ற அநாவசிய விஷயங்களை ஒழிக்கலாம்.

சவால்கள்

மாணவர்களின் திறன்களுக்கு மதிப்பீடு என்ற அம்சத்துடன், ஆசிரியர்களின் திறன் மற்றும் அவர்களின் உளவியல் ஆகிய இரண்டையும் கட்டாயம் தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், நமது ஆசிரியர் பயிற்சி முறையானது பலவிதமான விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது மற்றும் சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பது ஒரு பட்டவர்த்தன உண்மை. எனவேதான், கல்விமுறையை மாற்றுவதற்கு முன்பாக, ஆசிரியர் பயிற்சிமுறைகளை மாற்றி, அதன்மூலம் பலவித திறன்களையும், ஒரு நடுநிலையான உளவியல் பாங்கையும் வழங்குவது என்பது அவசர அவசியமாகிறது.

நாம் ஏற்கனவே, ஆசிரியர் தகுதி நிலைகள் பற்றி கல்விமலர் இணையதளத்தில் ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். பள்ளிப் படிப்பை சாதாரணமாக முடித்துவிட்டு, 2 வருடங்கள் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை சாதாரணமாக முடித்துவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது இடஒதுக்கீடு அடிப்படையிலோ ஆசிரியர் பணியை பெறும் ஒருவர்(தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியராகவும்கூட இருக்கலாம்), இதுபோன்ற புதிய முறையில் மாணவர்களை வழிநடத்தும் திறமையைப் பெற்றிருப்பார்களா?

குளறுபடிக்கான காரணங்கள்

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து, 1 வருட பி.எட். படிப்பை முடித்து, கைநிறைய சம்பளத்தையும், பணி சொகுசையும் எதிர்பார்த்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பல லட்சம் பேர். முதுநிலைப் பட்டப்படிப்போடு, பி.எட். படிப்பை முடித்தவர்கள் மேல்நிலைப் பிரிவுக்கான ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். பொதுவாக, இந்தியாவில் மாணவர் கல்வித்திட்டமாக இருந்தாலும், ஆசிரியர் பயிற்சியாக இருந்தாலும், அதில், மாணவர்களின் திறன் மற்றும் உளவியல் மேம்பாடு தொடர்பான நோக்கம் இருக்கிறதே ஒழிய, நடைமுறை சாத்தியப்பாட்டிற்கான வாய்ப்புகள் இருப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணங்களாக, தவறான கல்விமுறை மற்றும் தேர்வுமுறை, இந்த முறையிலேயே எதிர்கால தலைமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்களையும் உருவாக்குதல், நாட்டின் அபரிமித மக்கள்தொகை, மதிப்பெண்களை வைத்து வாய்ப்புகளை வழங்குதல், மனப்பாட முறை, கல்வி வியாபாரம், கல்வித்துறையில் அரசின் அலட்சியம் மற்றும் கணக்கிலடங்காத தனியார் கல்வி நிறுவனங்கள், எப்படியாவது ஏதேனும் ஒரு வேலை கிடைத்துவிடாதா? என்ற மக்களின் மனோபாவம், பிள்ளைகளின் திறனை பெற்றோர்கள் அறியாதது போன்ற பலவித காரணங்களை அடுக்கலாம்.

ஆசிரியர்களுக்கு தேவைப்படும் திறன்கள்

இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக சரிசெய்வது இயலாத காரியம்தான். ஆனால், சில முக்கிய மற்றும் அவசரமான அம்சங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டியுள்ளது. பள்ளி கல்விமுறையில், சமச்சீர் கல்வி, புதிய மதிப்பீட்டு முறைகள் போன்ற பலவித அம்சங்களை கொண்டுவரும் இந்நேரத்தில், அவற்றை செயல்படுத்தக்கூடிய ஆசிரியர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவது உடனடி அவசியம் மற்றும் அடிப்படை.

மாணவர்களின் பலவித திறமைகளை மதிப்பிடும் ஆசிரியர், உண்மையில் எந்தளவு ஒரு திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்பதை நாம் நிச்சயம் யோசிப்போம். சம்பளத்திற்காகவும், சலுகைக்காகவும் மட்டுமே வேலைபார்க்கும் மற்றும் ஆசிரியர் பணிக்கான தகுதியே இல்லாத பல லட்சம் பேர் நம் நாட்டில் உள்ள நிலையில், மாணவர்களின் திறன்களை மதிப்பிடும் அளவிற்கு இவர்கள் தகுதி வாய்ந்தவர்களா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

திறமை என்பதை ஒரு பக்கம் வைத்துக்கொண்டாலும் கூட, ஆசிரியர்களின் உளவியலைப் பற்றி நாம் நிச்சயம் யோசிக்க வேண்டியுள்ளது. திறமை என்பதைவிட, உளவியல் தகுதியானது மிகவும் முக்கியம். ஏனெனில், ஆசிரியர் என்பவர் ஒரு முன்மாதிரி என்பதில் தொடங்கி, மாணவர்கள் அனைவரையும் எந்தவித பேதமும் பாராட்டாமல் ஒரே மாதிரியாக, அனைவரின் எதிர்காலத்திலும் சமஅளவு அக்கறை வைத்து, அதிக உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு அதை செய்து, எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், மாணவர்களுக்காக தனது வாழ்வையே ஆதாரமாக ஆக்குபவராக ஒரு ஆசிரியர் திகழ வேண்டுமெனில், அவருக்கு உளவியல் திறன் மிகவும் அவசியம்.

ஆசிரியர்கள் மீதான அதிருப்திகள்

பிராக்டிகல் மதிப்பெண்கள் போடுவதில் பாரபட்சம் காட்டுவது, மாணவர்களிடம் பரிசுப் பொருட்களை எதிர்பார்ப்பது, தன்னை "கவனிக்கும்" மாணவர்களை தான் "கவனிப்பது"(வேறு வகையில்), தன் கருத்துக்கு சரியான மாற்றுக் கருத்துக்களை கூறும் மாணவர்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவர்களை வேறு வழியில் பழிவாங்க சந்தர்ப்பம் பார்ப்பது, பாடப்புத்தகங்களுக்கு வெளியே யோசிக்கும் மாணவர்களை வெறுப்பது, படைப்புத்திறன் உள்ளவர்களை மட்டம் தட்டுவது, பெற்றோர்களுடன் பிரச்சினையென்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை வஞ்சம் தீர்ப்பது, ஒரு மாணவருடன் கருத்து வேறுபாடு இருந்தால், அவரை அந்த வருடம் பெயில் ஆக்குவது, ஜாதிபேதம் பாராட்டுவது, ஜாதியை சொல்லி மறைமுகமாக திட்டுவது, பாலியல் கொடுமைகளை இழைப்பது, உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் வகையில் படுகாயம், சில சமயங்களில் மரணமே ஏற்படும் வகையில் மாணவர்களைத் தாக்குவது, மாணவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்ள முற்படாதது மற்றும் டியூஷன் படிக்காத மாணவர்களை படிக்குமாறு பலவிதங்களில் வற்புறுத்துவது உள்ளிட்ட ஏராளமான குறைபாடுகள் இன்று ஒரு குறிப்பிட்ட சதவிகித ஆசிரியர்களிடம் உள்ளன.

இத்தகைய குறைபாடுகளில் ஏதேனும் சிலவற்றையாவது கொண்ட ஆசிரியர்களை பார்க்காதவர்கள் இருப்பது கடினம்.

அரசின் கடமை

இந்நிலையில், மாணவர்களின் சுய திறன்களை மதிப்பிட்டு, அதற்கு ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கும் நடைமுறை கொண்டுவரப்படுகையில், பல மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். திறன் மதிப்பீடு என்ற நிலையே மாறி, ஆசிரியர்களோடு அனுசரித்து நடந்து கொள்வது மற்றும் அவர்களுக்கு தேவையான பரிசுப் பொருட்களை வழங்குவது என்ற கலாச்சாரம் வலுவாக உருவாகிவிடும்.

எனவே, இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தும் அதேவேளையில், ஆசிரியர் பயிற்சி முறையில் பல புதிய புத்தாக்க நடைமுறைகளைக் கொண்டுவந்து, ஆசிரியர்களை உளவியல் ரீதியாகவும், திறன்கள் ரீதியாகவும் முறையாக தயார்படுத்தும் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். திறன் மதிப்பீட்டு விஷயங்களில் மூன்றாம் நபர் கண்காணிப்பையும் உருவாக்கலாம்.

மாணவர்களால் வரும் அவஸ்தைகள்

அதேசமயம், ஆசிரியர்களுக்கும், மாணவர்கள் விஷயத்தில் அதிக சவால்கள் உள்ளன என்பதையும் மறுக்கவில்லை. ஜாதி செல்வாக்கையோ, அரசியல் செல்வாக்கையோ அல்லது பண பலத்தையோ வைத்து ஆசிரியர்களை மிரட்டுதல், பள்ளிக்கு வெளியே வைத்து ஆசிரியர்கள் தாக்கப்படுதல், ஆசிரியர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தல், பெற்றோர்கள் அநாவசியமாக சண்டையிடுதல், மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்களிடம் பாலின ஈர்ப்பை தூண்டும் விதத்தில் நடந்து கொள்ளுதல், வம்பு செய்வதற்காகவே பள்ளிக்கு வருதல், வகுப்பில் தொந்தரவு கொடுத்தல், அநாகரீகமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பலவித சங்கடங்கள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களால் ஏற்படுகின்றன.

எனவே, அரசு, இருபாலருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் முறையான நடவடிக்கைகளை, முறையான காலத்தில் செயல்படுத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us