செப் 30, 2011 12:00 AM
செப் 30, 2011 12:00 AM
அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவின் மிக முக்கிய கவலை வேலை வாய்ப்பு மற்றும் அது தொடர்புடைய அம்சங்கள் தான்! பொதுவாக வேலையை 2 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். சம்பளம் மற்றும் தற்காலிக அடிப்படையிலான பணிகள் மற்றும் சுயவேலை வாய்ப்பு என்பனதான் அந்த 2 பிரிவுகள்.
சமீபத்தில் வெளி வந்துள்ள ஒரு ஆய்வு அறிக்கையின் படி இந்தியாவில் 2005 முதல் 2010 வரையிலான காலத்தில் 277 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இது 2000 முதல் 2005 வரையிலான காலத்தில் 272 லட்சமாக இருந்துள்ளது.
முதல் பார்வையில் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்திருப்பது போல் தோன்றினாலும் இது குறித்த விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படிக் கணக்கிடுவதற்கு முற்றிலும் புதிய பணிகள் என்பது அடிப்படையாக எடுக்கப்படாமல், பணியிலிருந்து மாற்றம் பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதனை முற்றிலும் முன்னேற்றமான அம்சமாக எடுக்க முடியாது என்ற விமர்சனங்கள் எழுகின்றன.
உற்பத்தி மற்றும் சேவைத்துறை என்ற இரண்டு பரந்து விரிந்த வேலை வாய்ப்பு சந்தையில் உற்பத்தித் துறையில் தற்காலிக பணிகளுக்கே அதிகம் வாய்ப்புகள் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பிரசித்தி பெற்ற கிரைசில் ரிசர்ச் நிறுவனம் (CRISIL) ஒரு ஆராய்ச்சி செய்து தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அந்த முடிவுகள் இதோ...
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 39 சதவிகிதத்தினர் பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். இந்த விகிதத்தை நிலை நிறுத்த வேண்டுமென்றால் வரும் 2015ஆம் ஆண்டுக்குள் 550 லட்சம் புதிய பணி வாய்ப்புகள் உருவாக வேண்டும்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி முழுமையானதாக இருக்க 'எம்ப்ளாய்மென்ட் இன்டன்சிடி' எனப்படும் வேலைவாய்ப்பு நெருக்க விகிதம் முக்கிய அளவையாகக் கருதப்படுகிறது. 2005ல் இந்திய ஜி.டி.பி.,யின் 1.71ஆக இருந்த இந்த விகிதம் தற்போது 2010ல் 1.05ஆக குறைந்து உள்ளது. இது கவலை தரும் செய்தியாகும்.
வேலை வாய்ப்பு விகிதத்தை அதிகரிப்பதில் தேவை (Demand) மற்றும் பகிர்வு (Supply) ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளைக்களைவது முக்கிய தேவையாகக் கூறப்படுகிறது. உற்பத்தித் துறையின் தேவையில் உள்ள குறைபாடுகளை பணியாளர் சீர்திருத்தங்களின் மூலமும், சேவைத்துறையின் பகிர்வில் உள்ள குறைபாடுகளை உயர்கல்வித் துறையில் அதிவேக சீர்திருத்தங்களின் மூலமும் சரி செய்ய முடியும் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
2005 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் பணி வாய்ப்புகள் 277 லட்சம் ஏற்பட்ட போதும், சுய வேலை வாய்ப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 255 லட்சமாகக் குறைந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த அதிகரிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்த போதும் குறைந்தபட்ச திறமை தேவைப்படும் பணியாளர்களின் (லோஸ்கில்டு லேபரர்ஸ்) எண்ணிக்கையில் 7 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சேவைத் துறையைப் பொறுத்தவரை நிதி மற்றும் வியாபார சேவைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் துறையில் 70 சதவிகித அளவிற்கு வேலை வாய்ப்பு அதிகரித்தது உண்மைதான் என்ற போதும், இவற்றில் பெரும் பாலானவை தற்காலிகப் பணி இடங்கள் என்பது மறைந்திருக்கும் உண்மையாகும்.
