ஏப் 28, 2012 12:00 AM
ஏப் 28, 2012 12:00 AM
தற்போது இந்தியாவின் பணி வாய்ப்பு சந்தையில் ஒவ்வொரு துறையும் புதிய வாய்ப்புகளை வழங்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக தற்போதுதான் பட்டப் படிப்பை முடிப்பவர்கள் இது குறித்த ஒரு தெளிவான நிலையை அறிவது அவர்களின் எதிர்காலத்தை மேன்மைப்படுத்தும்.
தனிமனித வாழ்வின் இலட்சியங்களை அடைய, சிறந்த ஊதியத்தைப் பெற, நல்ல பணி எதிர்காலம் பெற்றிட புதிதாகப் பட்டம் முடிப்பவர்கள் இன்றைய பணிச்சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த ஒரு தெளிவான பார்வையைப் பெறுவது கட்டாயத் தேவையாக மாறியுள்ளது.
மெடிக்கல், இன்ஜினியரிங் மற்றும் நிர்வாகவியல் தொடர்புடைய மிகச் சிறந்த பணி வாய்ப்புகள் தற்போது இந்தியாவில் என்னென்ன என்பதை வேலை வாய்ப்பு சந்தையில் புதிதாக நுழைபவர்களுக்காக இங்கே பட்டியலிடுகிறோம்.
பேஷன் வடிவமைப்பில் சிறந்த ஈடுபாடு கொண்ட புதிய சிந்தனைகள் கொண்டவரா நீங்கள்? ஆம் எனில் பேஷன் டெக்னாலஜி துறை உங்களுக்குப் பொருத்தமானது. வெவ்வேறு நிறுவனங்களில் உள்ள பணி நிலவரம் இந்தத் துறையில் வல்லுனர்களை பெரிதும் தேடி வருகிறது.
பேஷன் டிசைனிங் தொடர்புடைய புட்வேர் அல்லது கிளாதிங், அக்சஸரிஸ், ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் ஆடைகள், இன்டீரியர் டிசைனிங், மெர்சண்டைசிங் போன்ற பல்வேறு பிரிவுகள் இத்துறைக்கு உள்ளன. எதிர்காலத்தில் பேஷன் டிசைனிங் துறை சார்ந்த வல்லுனர்களுக்கு இந்தியாவிலும், உலகளவிலும் பெரும் கிராக்கி நிலவும் என்று வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.
மீடியா மற்றும் பொழுதுபோக்கு தற்போது இந்தியாவில் உள்ள துறைகளில் மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறை அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வருவதுடன் புதிய வாய்ப்புகளையும் அள்ளித் தர துவங்கி உள்ளது.
ரேடியோ ஜாக்கி, மீடியா பிளானர், நியூஸ் ரிபோர்டர், ஆங்கர், கேமராமேன், எடிட்டர், இசையமைப்பாளர், வீடியோ டெக்னாலஜிஸ்ட், சவுண்ட்மேன், பி.ஆர்.ஓ., போன்ற இத்துறை சார்ந்த வல்லுனர்களுக்கு மவுசு கூடிக் கொண்டே வருகிறது. எனவே தனிநபர் விருப்பத்தைப் பொறுத்து இத்துறை சார்ந்த எந்த ஒரு பிரிவிலும் இணையலாம். பொதுமக்களின் கவனம் ஈர்க்கும் துறை என்பதால் புகழுடன் கணிசமான பணத்தையும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் இத்துறையில் உள்ளது.
ஆஸ்பிடாலிடி டூரிசம், டிராவல் மற்றும் ஓட்டல் துறையில் நன்கு பயிற்சி பெற்ற வல்லுனர்களுக்குத் தொடர்ந்து தேவை இருந்து கொண்டே இருப்பது நாம் அறிந்ததுதான். இத்துறை சார்ந்த மேனேஜ்மெண்ட் டிரெய்னி, கஸ்டமர் ரிலேஷன் எக்ஸிக்யூடிவ், மார்க்கெடிங், சேல்ஸ் எக்ஸிக்யூடிவ், கேட்ரிங் ஆபிஸர், செப்கள், பிளைட் கிச்சன், ஹவுஸ்கீப்பிங் மேனேஜ்மென்ட், கிட்சன் மேனேஜ்மென்ட், பாஸ்ட்புட் செயின்ஸ் போன்றவற்றில் ஏதாவது ஒரு துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். தேசிய அல்லது சர்வதேச விமான சேவை சார்ந்த பணியையும் நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
சட்டம் சர்வதேச அளவில் சட்டத் துறையே மிகவும் சவாலானதாகவும், களிப்பூட்டுவதாகவும் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. சிறந்த வளர்ச்சி காண்பதும் மற்றும் மதிப்பளிப்பதுமான துறை என்பதை நீங்கள் இத்துறையில் இணைய விரும்பினால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டம், சிவில் சட்டம், சர்வதேச சட்டம், தொழிலாளர் சட்டம், காப்புரிமைச் சட்டம், வரி சட்டம், கிரிமினல் சட்டம் என்ற பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட சட்டத் துறையை நீங்கள் தேர்வு செய்யலாம். அரசுப் பணி உங்கள் பணி எதிர்காலம் மிகவும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்று நீங்கள் விரும்புபவராக இருந்தால் நீங்கள் கட்டாயம் அரசுப் பணியை உங்கள் பணி எதிர்காலத்திற்கான வழியாக தேர்வு செய்ய வேண்டும்.
மருத்துவ வசதி, அரசு தங்கும் வசதி உள்ளிட்ட சிறந்த வசதிகளுடன் நல்ல ஊதிய விகிதங்களும் இந்தப் பணியின் இதர சிறப்புகள். அறிவியல், கலை உள்ளிட்ட பல்வேறுபட்ட படிப்புகளைப் படித்தவர்களுக்கும் அரசுப் பணியில் எல்லாவித வாய்ப்புகளும் உள்ளன. இந்தப் பதவியைப் பெற விரும்பினால் பணிக்கான எழுத்துத் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், அமைச்சகங்கள், பாராளுமன்றம், கிராமப்புற மேம்பாடு, பொதுத் துறை போன்ற பல்வேறு வாய்ப்புகள் இத்துறை சார்ந்தவை.
