மே 13, 2016 12:00 AM
மே 13, 2016 12:00 AM
ஒருவர் ஆண் என்றாலும், பெண் என்றாலும், அவர்களின் வாழ்க்கை முழுமை பெற வேண்டுமானால், அது மேலான கல்வியின் மூலமே சாத்தியம்!
பொறியியல் கல்வி
கடந்த சில ஆண்டுகளாக, பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பை ஒதுக்கி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நோக்கிச் செல்கின்றனர். இது, மிகவும் தவறான போக்கு!
பொதுவாக, தொழிற்கல்வியை கற்ற மனிதனின் வாழ்க்கை என்பது நிச்சயம் பிரகாசமாக இருக்கும். துவக்கத்தில், பொறியியல் படிப்பு படித்தவர்களும், கலை, அறிவியல் படித்தவர்களும் ஒரே மாதிரியான ஊதியம் பெற்றாலும், சில ஆண்டுகள் அனுபவத்திற்கு பிறகு, பொறியியல் படித்தவர்கள் தான் அதிக ஊதியம் பெறுவர். வெளிநாட்டு வாய்ப்பும் பொறியியல் படித்தவர்களுக்குத் தான் அதிகம் வரும்.
இவ்வாறு எங்கள் கல்லூரியில் படித்த மாணவர்கள், வெளிநாடுகளில் மாதம் நான்கு லட்சம் ரூபாய் வருமானம் பெறுகின்றனர். அதில் தனது செலவு போக, இரண்டு லட்சம் ரூபாயை கிராமத்தில் உள்ள தங்களின் தந்தைக்கு அனுப்பி வைக்கின்றனர் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
கலை, அறிவியல் படிப்புகளில் ஒரு சில பாடப்பிரிவில் வேண்டுமானால், இதுபோன்ற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தாலும், அவர்களது ஆண்டு ஊதிய உயர்வு விகிதாச்சாரம், தொழிற்கல்வி படித்தவர்களோடு இணைந்து வருவதில்லை!
அரசு சலுகை
இன்று, கிராமப்புற மாணவர்களுக்கு, அதிக சலுகைகளை அரசாங்கம் வழங்குகிறது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால், கல்விக்கட்டணத்தில் பாதியை அரசே ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறு, முன்பை விட மிக எளிதாகவும், மலிவாகவும் பொறியியல் கல்வி கிடைக்கும் தற்போதைய அருமையான வாய்ப்பை, மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெற்றோரும், இத்தருணத்தை பயன்படுத்தி, தங்களது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தின் மீதும், அவர்களது எதிர்காலத்தின் மீதும் உரிய கவனம் செலுத்த வேண்டும்!
மாணவர்கள், கல்லூரிப்படிப்புடன் ஆங்கில மொழித் திறனையும் நன்றாக வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். அதற்கு, மாணவர்கள் சார்ந்திருக்கும் கல்லூரி நிர்வாகமும், உரிய வசதியை உருவாக்கித் தர வேண்டும். அனுபவமிக்க ஆசிரியர்களையும், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் மாணவர்களுக்கு வழங்குவதை ஒவ்வொரு கல்லூரியும் உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய சூழலை வழங்கி, மாணவர்களை பிரகாசிக்க செய்வதைத்தான் எங்களது கல்லூரி கடமையாகவே கருதுகிறது!
-எஸ்.சேகு ஜமாலுதீன், செயலர், ஆலிம் முகம்மது சலேக் கல்வி நிறுவனங்கள், சென்னை.
