ஜூலை 04, 2016 12:00 AM
ஜூலை 04, 2016 12:00 AM
பேசுதல் என்பது கலை மட்டுமல்ல; அது ஒருவகை ஆற்றல். ஆற்றல் நன்முறையில் செலவழித்தல் அவசியம்!
ஆழமான புரிதல் மூலமாகவே பேசும் ஆற்றல் நல்வழிப்படும். இனிமையான சொற்கள் ஏராளம் இருக்கும் போது, எதற்காக கடுமையான சொற்களை பயன்படுத்த வேண்டும்? கடுமையான சொற்களால், ஆற்றல் வீணாக வேண்டாம். ஆற்றல் சேமிக்கப்படுவது நல்லது.
அதற்கு சரியாக பேச கற்றுக்கொள்ளுங்கள்; இனிமையாக, மற்றவர் மனம் புண்படாமல் பேசுங்கள். குறிப்பாக, தேவையான இடத்தில் மட்டும் பேசுங்கள். தேவையான இடத்தில் பேசுவது என்பது சாதகமான பலனையும், நல்ல செயல்கள் நடைபெறவும், உறுதுணையாக நிற்கும்!
உதாரணமாக, ஆப்ரகாம் லிங்கனின் ‘கெட்டிஸ்பர்க்’ பேச்சை குறிப்பிடலாம். அந்த உரை வெறும் 278 சொற்களையே கொண்டது. அந்த பேச்சு ஆரம்பத்தில் ஆதிக்க வர்க்கத்தால் எள்ளி நகையாடப்பட்டது. ஆனால், பின்னாளில் அந்த பேச்சை உலக உரைகளின் ஒப்பற்றதாக காலம் மாற்றி அமைத்துள்ளது. ஆகவே, சுருங்க பேசுதல் நலம்!
வாயா? மூளையா?
நம்மில் பெரும்பான்மையோருக்கு வாய் செயல்பட ஆரம்பித்தவுடன், மூளை அமைதி காக்க ஆரம்பித்துவிடுகிறது. மூளை செயல்படாமல் அமைதியாக இருக்கும் போது சொற்கள் பலம் இழந்து வந்து வீழும். ஆகவே, நிதானமாக பேச வேண்டும். அமைதியாக இருந்து சிந்திக்கும் போது, சிந்தனையுடன், வாழ்வும் ஆழம் பெறும்.
‘வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்’ என்பது வாஸ்தவம் தான். ஆனால் பல பிரச்சனைகளுக்கு காரணம் இந்த பேச்சுகள் தான்!
பேச்சை நாம் குறைப்பது அவசியம். நாம் ஒரு வார்த்தையைப் பேசுகின்ற வரை தான் அது நம் கட்டுப்பாட்டில் இருக்கும். பேசி முடித்தப் பின், அவ்வார்த்தையின் கட்டுப்பாட்டில் நாம் இருப்போம்.
உண்மையில் நாம் பேசாத வார்த்தைகள் குறித்து கவலை கொள்ள தேவையில்லை. பேசிய வார்த்தைகள் தான் நம்மை அதிகமாக துன்புறுத்துகின்றன. வெற்றியின் ரகசியம் பேச்சை சரியாக பேசுவதிலும், சுருங்க பேசுவதிலும் தான் இருக்கின்றது!
பேச்சின்றி எதுவும் நடக்காது. அதேசமயம் சுருங்கப் பேசுதலில் தான் பலன் அதிகம் என்பதை புரிந்து பேசுவோம்! சரியானவற்றைப் பேசுவோம்! சரியான மனநிலையோடு பேசுவோம்!!
-க.சரவணன், மதுரை.

