/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆராய்ச்சியும், கண்டுபிடிப்பும் அவசியம்!
/
ஆராய்ச்சியும், கண்டுபிடிப்பும் அவசியம்!
ஜூலை 14, 2016 12:00 AM
ஜூலை 14, 2016 12:00 AM
சர்வதேச கல்வி நிறுவனங்களின் தர மதிப்பீட்டு பட்டியலில், இந்திய உயர் கல்வி நிறுவனங்களால் முக்கிய இடங்களை பிடிக்க முடியாததற்கான காரணங்கள் பற்றி, அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் உண்மையை நிலையை, முதலில் ஆராய வேண்டியது அவசியம்!
மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, வரையறுக்கப்பட்ட கல்வித் திட்டத்தை மேற்கத்திய நாடுகள் கொண்டுள்ளன. ஐரோப்பா நாடுகள் அதற்கும் முன்பிருந்தே திட்டமிடப்பட்ட கல்வி முறையை பின்பற்றி வருகிறது. ஆனால், இந்தியாவில் முன்பு குருகுலக் கல்வி முறையே பின்பற்றி வந்தது. ஆங்கிலேயர்களது ஆட்சிக்கு பிறகே, அனைவருக்குமான கல்வித் திட்டம் புகுத்தப்பட்டது. மேற்கத்திய கல்வி முறைக்கும், இந்திய கல்வி முறைக்கும் பெரும் இடைவெளி இருக்கும் நிலையில், திடீரென ஒரே அளவீடுகளில், இருதரப்பு கல்வி நிறுவனங்களையும் மதிப்பிடுவது பொருத்தமானதல்ல.
கல்வி நிறுவனங்கள் குறித்த சர்வதேச தர மதிப்பீட்டில் அளவிடப்படும் அம்சங்கள், மேற்கத்திய கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. அவை, இந்திய கல்வி நிறுவனத்தின் தரத்தை சரியாக மதிப்பீடு செய்யும் வகையில் இல்லை!
ஆனால், மேற்கத்திய கல்வி முறைக்கு போட்டியிடும் வகையிலான கல்வி திட்டத்தை இந்தியா பெற்றிருக்கிறது. உலகின் எந்த மிகப்பெரும் கார்ப்ரேட் மற்றும் ஐ.டி., நிறுவனங்களை எடுத்துக்கொண்டாலும், அந்நிறுவனங்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்தியர்கள் முக்கிய பொறுப்பு வகுக்கின்றனர். இந்திய கல்வி நிறுவனங்களால், சர்வதேச அளவில் சிறந்த, தகுதியான, திறனாளர்களை உருவாக்க முடியும் என்பதையே இது உணர்த்துகிறது. வரும் காலங்களில், இந்திய கல்வி நிறுவனங்கள், தங்களின் தரத்தை, உலகரங்கில் மென்மேலும், நிச்சயம் நிருபித்துக் காட்டும்!
அதற்கு, மாணவர்களோடு இயைந்து, தொழில்நுட்ப ரீதியாகவும், ஆராய்ச்சி ரீதியாகவும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, பாடங்களை கற்பிப்பவராக மட்டுமின்றி, அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டியாகவும் ஆசிரியர்கள் பரிணமிக்க வேண்டும்.
ஒரு கல்வி நிறுவனத்தின் பணி, மாணவர்களை வேலை தேடுபவர்களாக மாற்றுவதல்ல; வேலை வழங்குநர்களாக உருவாக்குவதே! அனைத்து மாணவர்களுக்கும் தேவையான பணித் தகுதிகளை மேம்படுத்தும் அதே தருணத்தில், தொழில் முனைவோருக்கான பண்புகளை புகட்டுவதும் அவசியம்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மட்டும் இடம் அளித்து, அவர்களை மேலும் வல்லவர்களாக உயர்த்த, எந்த ஒரு கல்வி நிறுவனத்தாலும் முடியும். ஆனால், கிராமம், நகரம், மாநிலம் என பாகுபாடின்றி, நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும், கல்வியில் அனைத்து நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் இடம் அளித்து, அவர்களை கல்வியில் சிறந்து விளங்கச் செய்வதே ஒரு கல்வி நிறுவனத்தின் உண்மையான வெற்றி. இதையே பிராதான குறிக்கோளாகக் கொண்டு, எங்கள் கல்வி நிறுவனம் செயல்படுகிறது!
- ஏ.சி.எஸ். அருண்குமார், தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம், மதுரவாயல், சென்னை.

