ஜூலை 18, 2016 12:00 AM
ஜூலை 18, 2016 12:00 AM
படிக்கும் படிப்பு எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும், இன்றைய மாணவர்களின் பிரதான குறிக்கோள், சிறந்த வேலை வாய்ப்பை பெறுவதுதான்! சிறந்த வேலை வாய்ப்பு என்பது நல்ல வருமானம் தருவதாகவே கருதுகின்றனர்!
இது சரியா? அல்லது தவறா? என்பதல்ல நமது வாதம். மாணவர்கள் சுயமாக சிந்தித்து, தனக்கான ஒரு துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதே!
வேலை வாய்ப்பை மையமாக வைத்தே, மாணவர்கள் தங்களது படிப்பை தேர்வு செய்வதால், வேலை வாய்ப்பை மையப்படுத்தியே இன்று கல்வி நிறுவனங்களும், தங்களது விளம்பரங்களை வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் ‘கலர்புல்’ விளம்பரங்கள் அனைத்தும் உண்மை என நம்பி, கண் மூடித்தனமாக, முடிவு செய்ய வேண்டாம்!
முதலில், தாங்கள் விரும்பும் கல்லூரியின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏதுவாக, இணையதளங்களில் தகவல்களை தேடலாம். இறுதியாக, கிடைத்த தகவல்கள் அனைத்தும் உண்மையா? என்பதை கல்வி நிறுவனத்திற்கே நேரில் சென்று விசாரியுங்கள். பிறகு முடிவு செய்யுங்கள். இதுவே, கல்லூரிகளை தேர்வு செய்வதில் உள்ள சரியான அணுகுமுறை. இது, ஓட்டல் மற்றும் கேட்டரிங் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கும் நிச்சயம் பொருந்தும்.
ஏனெனில், இன்று கலை அறிவியல் கல்லூரிகள் கூட, மற்ற பல்வேறு படிப்புகளுடன் விருந்தோம்பல் துறை படிப்பையும் சேர்த்து வழங்குகின்றன. எந்த ஒரு படிப்பும் பிரத்யேகமாக வழங்குவதற்கும், பல படிப்புகளுடன் சேர்த்து வழங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. மேலும், படிப்பு சரியாக வராதவர்கள் தேர்வுசெய்யக்கூடிய துறையல்ல, விருந்தோம்பல் துறை. அது ஒரு தொழில்முறை மற்றும் தொழில்நுட்பம் இணைந்த துறை!
பெரும்பாலும் தொழில்முறை பாடத்திட்டத்தில், அனைத்து மாணவர்களும், துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் கட்டாயம் ‘இன்டர்ன்சிப்’ செய்ய வேண்டியதிருக்கும். ‘இன்டர்ன்சிப்’ என்பது ஒரு துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தனக்கான, பிரிவை தேர்ந்தெடுக்க மற்றும் உறுதிசெய்ய உறுதுணையாக அமையும் ஒரு சிறப்பு பயிற்சி.
சரியான அணுமுறை, திறமை மற்றும் ஒழுக்கம் இருந்தால், ‘இன்டர்ன்சிப்’ பயிற்சியின் போதே வேலை வாய்ப்பை பெற முடியும்! வெளிநாடுகளில் ‘இன்டர்ன்சிப்’ செய்வதன் மூலம் அந்நாட்டிலேயே வேலை வாய்ப்பை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆதலால், இப்பயிற்சியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது!
இந்த அம்சங்களை மாணவர்களுக்கு உணர்த்தி, அவர்களை வேலை பெறச்செய்வதோடு மட்டுமல்ல, அதிக தொழிலதிபர்களை உருவாக்குவதையுமே, நாங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்!
-பி.நவமணி, நிர்வாக இயக்குனர், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்ரிங் டெக்னாலஜி, சென்னை.

