ஆக 25, 2016 12:00 AM
ஆக 25, 2016 12:00 AM
வாழ்க்கையின் வெற்றி எதில் இருக்கிறது? செல்வத்திலா? செல்வாக்கிலா? படிப்பிலா? உயர் பதவியிலா?
இவை உங்களுக்கு வசதிகளையும், நல்வாய்ப்புகளையும் தேடித் தர பயன் படலாம். அதனால் மட்டும் உங்கள் வாழ்க்கை நிறைவு பெற்று, வெற்றி அடைந்து விடாது! அவைகள் எல்லாம் கிடைத்த பிறகும் உங்கள் மனது மீண்டும் எதையோ தேடி அலைந்து கொண்டே தான் இருக்கும்!
எதை என்கிறீர்களா? மன நிம்மதியைத்தான்! பல சான்றோர்கள் கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று சொல்வார்கள்! ஆம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பிரதிநிதியை வைத்துத்தான் கடவுள் படைத்திருக்கிறான். அந்தப் பிரதிநிதி நம் உயிர் பிரியும் வரை, ஒரு வினாடி கூடத் தூங்காமல் விழித்துக் கொண்டு, எது தர்மம், எது நியாயம் என்று நமக்கு வழி காட்டிக் கொண்டுதான் இருக்கிறான்!
அதற்குப் பெயர்தான் மனச்சாட்சி! எப்பொழுது நாம் மன சாட்சிக்கு விரோதமாக செயல்படுகிறோமோ அப்பொழுதே நம் மனதில் ஒரு சுமை ஏற்றப்படுகிறது. இவ்வாறு வாழ்நாள் முழுவதும் இப்படி நிறைய சுமைகளை நாம் ஏற்றிக் கொண்டே போகிறோம்!
மனதில் பாரங்களை ஏற்றிக் கொண்டே போகப் போக, ஒரு தருணத்தில் சுமை தாங்காமல் மன அழுத்தம் வருகிறது!
மன அழுத்தம் ஒரு கொடிய நோய்! அதற்கு சரியான மருந்து கிடையாது. மன அழுத்தம் ஒரு பாதுகாப்பற்ற மனோ நிலையை உருவாக்கி, நம் மன நிம்மதியைப் போக்கி, வாழ்க்கையில் எதை தேடிக் பெற்றாலும், நிம்மதியில்லாமல் நம்மை தீராத வேதனையில் தள்ளி விடுகிறது!
யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிந்தே நாம் மனச் சாட்சிக்கு விரோதமாக செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு சுமைதான்! வாழ்க்கையில் மனசாட்சி தவறு என்று சுட்டிக் காட்டும் தவறுகளை எல்லாம், அந்தப் பாவச் சுமைகளை எல்லாம் அவ்வப்பொழுது வாழ்க்கையில் இறக்கி வைத்துக் கொண்டே போக வேண்டும்! அதாவது மனதில் சுமை நீங்க, மனசாட்சி கூறுவதைக் கேட்டு, அதன்படி செயல்பட வேண்டும்!
மனசாட்சிப்படி நடந்தால், மனதில் சுமை இருக்காது. மனதில் சுமை இல்லாவிட்டால், மன அழுத்தம் இருக்காது; அதுவே உண்மையான வெற்றி! அதன் சுகமே தனி! அனுபவித்துப் பாருங்கள்! சொர்க்கம் உங்கள் கைகளில்!
-துடுப்பதி ரகுநாதன்
