மே 31, 2017 12:00 AM
மே 31, 2017 12:00 AM
உயிரியல் படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய துறையாக நுண்ணுயிரியல் எனும் ‘மைக்ரோபயாலஜி’ துறை உருவெடுத்துள்ளது!
மக்களின் அன்றாட வாழ்க்கையில், நுண்ணுயிர் என்பது நேர்மறையாகவும் மற்றும் எதிர்மறையாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.நம்மை சுற்றி பல வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் புரோடோசோவாக்கள் உள்ளிட்ட ஏராளமான, மனிதக் கண்களுக்கு புலப்படாத கிருமிகள் உள்ளன.
இவற்றை தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்து, அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும், பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நமக்கு கற்பிக்கிறது, ‘மைக்ரோபயாலஜி’.
படிப்புகள்
‘மைக்ரோபயாலஜி’ ஒரு பன்முகத்துறைகள் ஒருங்கிணைந்த அறிவியல் படிப்பாகும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பி.டெக்., மற்றும் பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி போன்ற படிப்பில் சேரலாம்.
மருத்துவம், உணவு, தொழில்துறை மைக்ரோபயாலஜி மற்றும் மைக்ரோபியல் தொழில்நுட்பம் போன்ற ஏதேனும் ஒன்றில் ஸ்பெஷலைசேஷனுடன் முதுநிலை படிப்பை படிக்கலாம். மேலும், ஆராய்ச்சி பட்டப்படிப்பையும் மாணவர்கள் தொடரலாம்.
என்ன படிக்கலாம்
மனித உடல், சமுத்திரங்களின் ஆழம், வெவ்வேறான காலநிலைக் கொண்ட பகுதிகள் மற்றும் மிருகங்களின் உடல் உள்ளிட்ட பல்வேறு வகையான இடங்களில் வாழும் நுண்ணுயிரிகள் மற்றும் மனிதனுக்கு அவற்றால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அவை மனித உடல்நலத்திற்கு செய்யும் தீமைகள் ஆகிய அனைத்து விஷயங்களைப் பற்றி விரிவாக படிக்கும் படிப்பு.
கல்வி நிறுவனங்கள்
மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம் - ஹரியானா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், பாபேசாகிப் அம்பேத்கர் பல்கலைக்கழகம் உட்பட நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இத்துறை சார்ந்த படிப்பை வழங்குகின்றன.
பணி வாய்ப்புகள்
பயோடெக் கார்பரேட் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள ஆய்வகங்கள், பார்மசூடிக்கல் நிறுவனங்கள், உணவு, பானம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள், கிளினிக்கல் ஆராய்ச்சி மற்றும் புதிய மருந்து கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் தொழில்துறைகள், அரசு ஏஜென்சிகள் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
