டிச 27, 2017 12:00 AM
டிச 27, 2017 12:00 AM
வெளிநாட்டில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.,) போன்ற பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மற்றும் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, தங்களது ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள விரும்பும் யார் வேண்டுமானாலும், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வை எழுதலாம்.
தேர்வு முறை
ஐ.இ.எல்.டி.எஸ்., அகடமிக் தேர்வு மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., ஜெனரல் தேர்வு என இரண்டு பிரிவுகள் உள்ளன. உயர் கல்வியை தொடரும் மாணவர்கள் ஐ.இ.எல்.டி.எஸ்., அகாடமிக் தேர்வை எழுத வேண்டும். ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுபவர்கள், வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் தொழில் முறை பயிற்சிகளை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஐ.இ.எல்.டி.எஸ்., ஜெனரல் தேர்வை எழுதலாம்.
இந்த இரண்டு தேர்வுகளும், கவனித்தல், வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். தேர்வை எழுதுபவர் இந்த நான்கு பிரிவுகளிலும் கலந்துகொள்ள வேண்டும்.
கவனித்தல் தேர்வு, நான்கு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு- இரு நபர்களிடையே நடைபெறும் சமூகம் சார்ந்த உரையாடல். இரண்டாம் பிரிவு- நீண்ட உரையாடல். மூன்றாம் பிரிவு - நான்கு நபர்கள் வரை சேர்ந்து, குழுவாக கல்வி முறைப்படி உரையாடுதல். நான்காம் பிரிவு - கல்வி சம்பந்தமான உரையாடல்.
வாசித்தல் தேர்வில், வாசிக்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. பேசுதல் தேர்வு மூன்று பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு - தேர்வாளருடன் நேருக்கு நேர் அமர்ந்து பேசுதல். இரண்டாம் பிரிவு- கொடுக்கப்பட்ட தலைப்பின் அடிப்படையில் பேசுதல். மூன்றாம் பிரிவு- இரண்டாம் பிரிவில் தேர்வர்கள் பேசிய தலைப்பிலிருந்து துணைக் கேள்விகள் கேட்கப்படுதல்.
எழுத்து தேர்வு, இரண்டு பிரிவுகளை கொண்டது. முதல் பிரிவு - தகவல், வரைபடம் ஆகியவற்றின் மூலம் புரிந்த விளக்கத்தை சொந்த வரிகளில் எழுதுவது. இரண்டாம் பிரிவு - விவாதம் அல்லது சிக்கலின் அடிப்படையில் கட்டுரை எழுதுதல்.
மதிப்பெண்கள் 0 - 9 புள்ளிகள் முறையில் வழங்கப்படும்.
தேர்வின் கால அளவு: 3 மணி நேரம்.
விபரங்களுக்கு: www.ielts.org
