ஜன 01, 2018 12:00 AM
ஜன 01, 2018 12:00 AM
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவில் நடத்தப்படும், ‘செட்’ அல்லது ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தமிழக ‘செட்’ தேர்வை, மாநில அரசின் சார்பில் கொடைக்கானலில் உள்ள மதர்தெரசா மகளிர் பல்கலைக்கழகம், இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், அறிவியல், மேலாண்மை, சமூக அறிவியல், மானுடவியல், மின்னணு அறிவியல், ஊடகவியல் மற்றும் தொடர்பியல், சட்டம், உளவியல், சமூக பணி, அரசியல் அறிவியல், புவியியல், கல்வியியல், பொருளாதாரம், வணிகவியல் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறை பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
முதுநிலை கல்வியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கென எவ்வித வயது வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
தேர்வு முறை: ரசாயன அறிவியல், கணினி அறிவியல் மற்றும் பயன்பாடு, சமஸ்கிருதம், கணித அறிவியல், இந்தி, ஆங்கிலம், வாழ்க்கை அறிவியல், தமிழ் மற்றும் புவி அறிவியல் உட்பட 17 துறைகளில் ஏதேனும் ஒரு சம்பந்தப்பட்ட துறை பிரிவின் கீழ் தேர்வு எழுதலாம். மூன்று தாள்கள் கொண்ட இத்தேர்வில், முதல் இரண்டு தாள்களில், 50 கேள்விகள் வீதம், மொத்தம் 100 கேள்விகளும், மூன்றாம் தாளில் 75 கேள்விகளும், ’அப்ஜெக்டீவ்’ அடிப்படையில், ‘மல்டிபில் சாயிஸ்’ முறையில் கேட்கப்படும்.
கேள்வித்தாள்: கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இடம்பெறும். மொழிப் பாடங்கள், கணிதம், புவி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் பயன்பாடு, மின்னணுவியல், இரசாயன அறிவியல் மற்றும் உடல் அறிவியல் போன்ற பாடப்பிரிவு கேள்விகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், விழுப்புரம், காரைக்குடி மற்றும் தஞ்சாவூர்.
விபரங்களுக்கு: www.motherteresawomenuniv.ac.in
