டிச 16, 2008 12:00 AM
டிச 16, 2008 12:00 AM
வரும் ஜனவரி முதல் ஐ.ஐ.எம்., தவிர பிற டாப் பிசினஸ் ஸ்கூல்களில் நடத்தப்படும் எம்.பி.ஏ., படிப்புக்கான தேர்வு முறைகள் துவங்கி விடும். எம்.பி.ஏ., படிப்பை தற்போது ஏராளமான கல்லூரிகள் வழங்குகின்றன. ஆனால் சில கல்லூரிகள் தான் எம்.பி.ஏ., படிப்பில் டாப் வரிசையில் வருகின்றன.
இவற்றின்படிப்புக்குக் கடுமையான போட்டி இருப்பதால் சில கல்லூரிகள் தாங்களாகவே பல அடுக்கு தேர்வு முறைகளை நிர்ணயித்துக் கொள்கின்றன. எனவே உங்களின் பயிற்சியையும் திறனøயும் கூர்தீட்டிக் கொண்டு களத்தில் குதிப்பது தான் நல்லது.
நிர்வாகம் என்பது ஒரு குழுவோடு தொடர்புடையதாக இருப்பதால் தான் குழு விவாதத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு குழுவோடு வெற்றிகரமாக இயங்குவதில் தான் உங்களது வெற்றி இருப்பதால் முன்னணி பி-ஸ்கூல் நிறுவனங்கள் குழு விவாதத்தை ஒரு முக்கிய தேர்வு முறையாக வைத்துள்ளன.
குழு விவாதத்தில் பரிசோதிக்கப்படுவது என்ன?
ஒரு தலைப்பு தரப்பட்டு அதில் விவாதிக்குமாறு நீங்கள் பணிக்கப்பட்டாலும் விவாதத்தில் முக்கியமாக பரிசோதிக்கப்படும் அம்சங்கள் இவை தான்.
செய்தித் தாள் படிக்கும் ஒருவர் அன்றாடம் செய்திகளை படிக்கிறார். பின் அது குறித்து பத்திரிகையின் பார்வையை அறிந்து கொள்கிறார். பின் இது குறித்து வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்கிறார். இது போல சில ஆண்டுகள் படித்த பின் அவருக்கென்று எல்லா விஷயங்களைப் பற்றியும் ஒரு பார்வை வந்து விடுகிறது. இப்படித்தான் பகுத்தாராயும் திறன் வருகிறது. இதை மனப்பாடம் செய்து எப்படி அறிய முடியும்? நமது பள்ளிகளும் கல்லூரிகளும் இதையெல்லாம் கற்றுக் கொடுப்பதற்கு மெனக்கிடுவதில்லை.
விஷய ஞானம் என்பது அவசர அவசரமாக புள்ளிவிபரங்களையும் விவாதங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதல்ல. அன்றாட செய்தித்தாள் படிக்காமல் நமக்கு விஷய ஞானம் வரவே வராது என்பதை மனதில் கொள்ளவும். எத்தனை நடப்புச் செய்திகளை நாம் அவசர அவசரமாக படிக்க முடியும்? அதில் எவற்றையெல்லாம் மனதில் இருத்திக் கொள்ள முடியும்?
2. தகவல் தொடர்புத் திறன்: ஒரு குழுவில் இணைந்து பணியாற்றுவோருக்கு, குறிப்பாக மேலாளருக்கு (எம்.பி.ஏ., தகுதியுடையவர்) அவசியம் தேவையான திறன் இது. குழு விவாதங்களில் நீங்கள் முதலில் மற்றவர் பேசுவதை கவனிப்பவராக இருக்க வேண்டும். விவாதத்திலேயே இது அறியப்படுகிறது. பின்பு சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்களது கருத்தை சொல்லத் தெரியவும் வேண்டும்.
மற்றவர் கூறும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உங்களது விவாதத்தை எழுப்பத் தெரிந்திருப்பதும் அவசியத் திறனாகிறது. முடிந்தால் அனைவரது கருத்துக்களையும் திரட்டி சுருக்கமாக சொல்லத் தெரிந்திருப்பது மிகப்பெரிய பலமாக அமையும். விஷயங்கள் எல்லாம் தெரிந்து ஆங்கிலம் தெரியாமலிருந்தாலும் விஷயமே தெரியாமல் வெறும் ஆங்கில பேசும் திறன் மட்டும் பெற்றிருந்தாலும் வெற்றி உங்களைத் தேடி வரவே வராது.
3. குழு குணாதிசயம்: ஒரு சிறிய குழு என்றாலும் கூட அதை அரவணைத்துச் செல்லும் பண்பு மிக முக்கியம். கவனித்தலும் வழி நடத்தலும் இதன் கூடுதல் தேவைகள். எனவே தொடக்கத்திலேயே தடால் என எந்த கருத்தையும் ஓங்கி அடித்துப் பேச வேண்டாம். தலைப்பின் இரு பக்கங்களையும் மனதில் புரட்டிப் பார்க்கவும்.
-நீங்க சொல்வது தப்பு
-இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை
போன்ற நெத்தியடி விவாதப் போக்கு வேண்டவே வேண்டாம். மறுப்பதைக் கூட மரியாதையோடும் பண்போடும் மறுக்க வேண்டும். மற்றவர் சிறப்பான கருத்தைக் கூறினால் அதைப் பாராட்டுவது மிக அவசியம். நீங்கள் உள்ள குழுவில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம். பாதிக்கும் மேற்பட்டோர் ஒத்துக் கொண்டால் அதுவே சிறப்பான விவாதம் நடத்தப்பட்ட குழு என்பதை அறியவும்.
4. தலைமை பண்பு: குழுவை அடக்குவதே தலைமைப் பண்பு என மறந்து கூட நினைக்க வேண்டாம். குழுவை வழி நடத்திச் செல்வதிலும் அனைவரது கருத்துக்களையும் கேட்கும் பண்பைப் பெற்றிருப்பதிலும் இறுதியாக சிறப்பான ஒருமித்த கருத்தை ஓரளவுக்கு எட்ட உதவுவதிலும் தான் தலைமை பண்பு வெளிப்படுகிறது.