/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
எம்.பி.ஏ.,வின் எதிர்காலம் என்ன
/
எம்.பி.ஏ.,வின் எதிர்காலம் என்ன
மார் 01, 2009 12:00 AM
மார் 01, 2009 12:00 AM
மந்தமான பொருளாதாரச் சூழலால் நிச்சயமற்ற தன்மையே பொருளாதாரத்தில் நிலவுவதைக் காண்கிறோம். இந்த நிச்சயமற்ற தன்மையால் அதிக பாதிப்புக்குள்ளாவது இளைஞர்கள் தான். படித்த பின் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவோடு இருந்த இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
மிகச் சிறந்த மேனேஜ்மென்ட் நிறுவனங்களைத் தவிர பிற மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் இல்லாததைக் கண்டு திகைப்புறுகின்றனர். அப்படியென்றால் சிறப்பான எதிர்காலத்தைத் தரும் என்று நம்பப்படும் எம்.பி.ஏ., படிப்பு மதிப்பிழக்கிறதா?
இது தொடர்பாக சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு கருத்தரங்கில் எம்.பி.ஏ.,படிப்பின் மதிப்பு தொடர்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போதைய பொருளாதாரச் சுணக்கம் என்பது தற்காலிகமானது தான் என்றும் எம்.பி.ஏ., படிப்பு அதன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் இந்த கருத்தரங்கில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
‘நிதி, மார்க்கெட்டிங், விற்பனை, மனித வளம் ஆகிய மேனேஜ்மென்ட் பிரிவுகள் பற்றிய ஆழ்ந்த பார்வையை எம்.பி.ஏ., படிப்புகள் கற்றுத் தருகின்றன. பகுத்தாராயும் திறன், முடிவெடுக்கும் திறன், மென்திறன்கள், தகவல் தொடர்புத் திறன், இணக்கமான முடிவெடுக்கும் திறன், நம்பிக்கை தரும் விதத்தில் நடந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை எம்.பி.ஏ., மாணவர் ஒருவர் பெற்றிருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே எம்.பி.ஏ., என்பதே நீண்ட காலத்திற்கான சிறந்த முதலீடாக விளங்குகிறது. சொல்லப்போனால் எம்.பி.ஏ., படிப்பு மட்டுமே தற்போதைய பொருளாதாரப் பிரச்னைகளை தீர்க்க முடியும்‘ என்று இந்த கருத்தரங்கு கூறியது. மேலும் எம்.பி.ஏ., படிப்பை மற்றுமொரு படிப்பாகக் கருதாமல் அதிலிருந்து ஆழ்ந்த நிர்வாக உத்திகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டது. மொத்தத்தில் எம்.பி.ஏ., படிப்பானது இன்றைய
வாழ்வின் சவால்களை சந்திக்க உதவும் என்பதால் இப் படிப்பின் எதிர்காலம் குறித்த கவலை தேவையற்றது என்றே துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள்.