ஜூலை 11, 2009 12:00 AM
ஜூலை 11, 2009 12:00 AM
நீங்கள் பிளஸ் 1 படிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான காலகட்டத்தில் நுழைந்திருக்கிறீர்கள். உங்கள் கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்தில் காலடி வைத்திருக்கிறீர்கள். உற்சாகம் கொள்வதில் தவறில்லை. எனினும் படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற அக்கறையும் அவசியம்.
இது ஒரு முக்கியமான காலகட்டம். ஒரு மாணவரின் வாழ்க்கையில் மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன. அவை பத்தாம் வகுப்புக்கு பின், பிளஸ் 2வுக்கு பின் மற்றும் இளநிலை படிப்புக்கு பின். பிளஸ் 2 மிக முக்கியமான கட்டமாக குறிப்பிடுவர். அந்த திருப்பு முனையான காலகட்டத்தை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். இதை எவ்வாறு எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதில் தான் உங்கள் மொத்த வாழ்க்கையும் அடங்கியுள்ளது.
புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, திறமையாக அதை செயல்படுத்தினால் எதிலும் வெற்றி பெற முடியும். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
இலக்கு-நிர்ணயித்தல்:
உங்களுக்கென கனவு அவசியம். இலக்கு என்றும் அதை கூறலாம். இலக்கு என்பதை விட பல்வேறு இலக்குகள் அவசியம். ஒரு மிகப்பெரிய இலக்கை அடைய சிறிய அளவிலான இலக்குகளை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். டாக்டராகவோ, ஒளிப்பதிவாளராகவோ, வழக்கறிஞராகவோ, பத்திரிகையாளராகவோ, எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியராகவோ அல்லது விவசாயத்தில் சாதிக்க வேண்டுமெனவோ நீங்கள் விரும்பலாம்.
அந்த இலக்கை நோக்கிய பயணத்தை இப்போதே தொடங்க வேண்டும். கால் பந்து விளையாட்டில் எவ்வாறு கோல் கீப்பர் எதிரணியின் கோல் போஸ்ட் மீதும் கவனம் செலுத்துகிறாரோ அதே போல் உங்கள் கவனமும் இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.
கவனம்: ஒரு நாள் தீக்குச்சியை வெயிலில் நீண்ட நேரம் பிடித்து காட்டுங்கள். எதுவும் நேராது. அதே சமயம் தீக்குச்சி நுனியில் மருந்து இருக்கும் இடத்தில் குவிலென்ஸ் உதவியிடன் ஒளி விழும்படி செய்யுங்கள். அடுத்த சில நொடிகளில் தீக்குச்சி பற்றிக் கொள்ளும். இதற்கு காரணம் லென்ஸ் மீது விழும் வெப்பக்கதிர்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு அதிகப்படியான வெப்பம் உருவாக்கப்படுகிறது. இதனால் தீக்குச்சி பற்றிக்கொள்கிறது. மனித மனமும் இதைப் போன்றதே. மனதை அலைபாய விட்டுவிட்டு எவ்வளவு நேரம் உழைத்தாலும் பயனில்லை. படிக்கும் போது மிக கவனமாக படிக்க வேண்டும்.
தேவைகள்: தேர்வுக்கு தயாராகும் போது முன்று விஷயங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். பாடத்திட்டம், புத்தகங்கள், முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள். இவற்றை சேகரித்துக் கொள்ளுங்கள். முன்னரே பாடங்களை படித்துவிட்டு வகுப்புகளுக்கு செல்வதே சிறந்தது. ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ள இது தான் உதவும்.
டைம்டேபிள்: ஆண்டின் துவக்கத்திலேயே ஒரு டைம்டேபிளை தயார் செய்து கொள்ளுங்கள். கடினம் என நீங்கள் கருதும் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். கடினமானதாக இதை உருவாக்க வேண்டாம். நடைமுறைபடுத்தும் வகையில் இது அமைய வேண்டும். வெவ்வேறு பாடங்களுக்கு சரியாக நேரம் ஒதுக்குங்கள். தொடர்ந்து படிக்காமல் இடையே போதுமான இடைவேளை இருக்கட்டும். மாலை, அதிகாலை என படிக்க உங்களுக்கு பொருத்தமான நேரம் எது என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள். பள்ளி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களுக்கு தனித்தனியாக டைம்டேபிளை தயாரித்துக்கொள்ளுங்கள். பிற வீட்டு வேலைகளை கவனிக்கவும், பொழுதுபோக்குக்கும் நேரம் ஒதுக்குங்கள். தேவைக்கு ஏற்ப டைம்டேபிளை ஒவ்வொரு மாதமும் மாற்றிக் கொள்ளலாம். மாதத்துக்கான திட்டம், ஆண்டிற்கான இலக்கு என முடிவு செய்து கொள்ள வேண்டும்.
படிக்கும் பழக்கம்: எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள் என்பதை விட எப்படி படிக்கிறீர்கள் என்பதே முக்கியம். சரியான முறையில் படித்தால் குறைவான நேரத்தில் அதிகம் படிக்கலாம். நன்றாக படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கணிதம்: ஒரு குறிப்பிட்ட கணக்கை எவ்வாறு செய்வது என்பது பற்றி படிக்கிறீர்கள். புத்தகத்தில் கொடுத்துள்ள உதாரணத்தை பார்க்கும் போது அது எளிதானதாக தோன்றும். பின்னர் தேர்விலோ, வகுப்பறையிலோ செய்து பார்க்கும் போது சிக்கலானதாக இருக்கும். இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது? வீட்டில் படிக்கும் போதே கணக்குகளை தனியாக செய்து பார்க்க வேண்டும். சிக்கல் ஏற்படும் போது மட்டும் புத்தகத்தின் உதவியை நாட வேண்டும். இவ்வாறு செய்வதால், பின்னர் இது போன்ற பிரச்னை ஏற்பட்டால் புத்தகத்தின் உதவியின்றியே கணக்கை செய்து முடிக்க முடியும். குழப்பமான கணக்கு அது எளிதாகும் வரை தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும்.
படங்கள்: அறிவியல் பாடத்தில் குறிப்பிட்ட விஷயங்களை விளக்க பல்வேறு படங்கள் இடம்பெற்றிருக்கும். நீங்கள் இந்த படங்களை நினைவில் வைத்துக்கொண்டு தேர்வில் வரைய வேண்டும். உங்கள் கண்ணும், மூளையும் கேமராவை போன்று செயல்படாது. புத்தகத்தில் படம் எளிமையானதாக தோன்றலாம். வரைந்து பார்க்கும் போது தான் அதில் உள்ள பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும். எனவே வரைந்து பழக வேண்டும். தொடக்கத்தில் புத்தகத்தின் உதவியுடன், பின்னர் புத்தகத்தை பார்க்காமல் வரைய வேண்டும்.
எப்போது தொடங்குவது: எப்போது இந்த செயல்களை தொடங்குவது என சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டாம். இன்றே செய்ய முடியும் என நினைக்கும் காரியத்தை மறுநாளைக்கு ஒத்தி வைப்பது தவறு. இதற்கு ஒரு எளிதான மந்திரம் உள்ளது.‘இப்போதே தொடங்குங்கள்’.
சரியான வாசிப்புமுறை: சத்தமாக படிக்க வேண்டாம். உச்சரிப்பை திருத்திக்கொள்ள, பாடல்களை படிக்கும் போது மட்டுமே சத்தமாக படிக்கும் முறை உதவும். பாடங்களுக்கு எற்ப படிக்கும் முறையை மாற்றிக்கொள்ளவும். எளிதானவற்றை விரைவாக வாசித்து செல்லவும். முணுமுணுக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. வார்த்தைக்கு வார்த்தை வாசித்து செல்ல வேண்டியதில்லை. விரல்களையோ, தலையையோ கூட அசைக்க வேண்டியதில்லை. ஒரு பத்தியை வாசித்து முடித்தவுடன் அதை நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறதா என்பதை சோதிக்கவும். பாடத்தில் இருந்து தெரிந்து கொண்ட விஷயங்களை பட்டியலிடவும். நீங்கள் வாசித்த விஷயங்களை புதிதாக சொந்தமாக விவரிக்க முயற்சிக்கவும். படிக்கும் வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கலாம்.
டிக்சனரி பழக்கம்: படிக்கும் போது ஒரு வார்த்தைக்கான அர்த்தம் தெரியாவிட்டால் உடனடியாக டிக்சனரியை நாட வேண்டும். பிறரிடம் அர்த்தம் கேட்பதை தவிர்க்கவும். குறிப்பிட்ட வார்த்தையை வாக்கியமாக பயன்படுத்தி, அர்த்தம் விவரிக்கும் ‘லேர்னர்ஸ் டிக்சனரி’யை உபயோகித்து பழகவும். வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை தெரிந்து கொள்ளவும்.
நீமோனிக்ஸ்: நீமோனிக்ஸ் என்றால் நினைவு குறிப்புகள். ‘விப்ஜியார்’ (VIBGYOR) என்றவுடன் வானவில்லின் ஏழு நிறங்கள் நினைவுக்கு வருகிறது. இதையே நீமோனிக்ஸ் என்கின்றனர். பல்வேறு விஷயங்களை நினைவுபடுத்திக்கொள்ள இது போன்ற நீமோனிக்ஸ் உதவும்.
குறிப்பு எடுத்தல்: வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் போது முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்து பழகிக்கொள்ள வேண்டும். குறிப்புகள் முழுமையான வாக்கியமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வகுப்பறையில் ஆசிரியர் மீது மட்டும் கவனம் இருக்க வேண்டும்.
பெரிய கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிப்பது: பெரிய கட்டுரைகளை படிக்கும் போது முழுமையாக கவனம் செலுத்தவும். முக்கியமானவற்றை குறிப்பெடுத்துக்கொள்ளவும். ‘நீமோனிக்’ முறையில் நினைவுபடுத்திக் கொள்ளவும். இவற்றை வைத்துக் கொண்டே தேர்வில் கட்டுரை எழுதிவிடலாம். முதலில் முக்கிய குறிப்புகளை எழுதிவிட்டு, அவற்றை விவரிக்கும் வகையில் கட்டுரைகளாகவும் எழுதலாம். எளிமையான நடையில், சிறிய வாக்கியங்களையே பயன்படுத்தவும். அறிவியல் பாடம் என்றால் தேவையான இடத்தில் படங்களை வரைந்து கொள்ளவும். கணித தேர்வில் ஒவ்வொரு கட்டமாக விடையை கொண்டுவரவும். ஏதாவது ஒரு கணக்கில் சிக்கல் ஏற்பட்டால், பிற எளிதான கேள்விகளுக்கு விடையளித்து விட்டு, கடைசியாக இந்த கணக்கை தொடரவும்.
நுழைவுத்தேர்வு: இதுவரை பள்ளிக்கூடங்களில் படித்த விஷயங்களில் இருந்து தான் நுழைவுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். ஆனால் பெரும்பாலும் ‘ஆப்ஜெக்டிவ்’ வகை கேள்விகளாகவே அமைந்திருக்கும். பள்ளித்தேர்வுக்கு படிக்கும் போதே நுழைவுத்தேர்வுகளுக்கும் உதவும் வகையில் படிக்க வேண்டும்.
மாதிரி தேர்வுகள்: தேர்வு அறையில் இருப்பது போன்றே மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். பள்ளித்தேர்வாக இருந்தாலும், நுழைவுத்தேர்வாக இருந்தாலும் இது போன்ற பயிற்சி அவசியம். இது போன்ற மாதிரித்தேர்வுகள் வேகத்தை அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும். கவனமின்மையால் ஏற்படும் சிறிய தவறுகளை தவிர்க்கவும். மாதிரித்தேர்வில் ஏற்படும் தவறுகள் உண்மையான தேர்வில் நிகழாதபடி திருத்திக்கொள்ள வேண்டும்.
தேர்வு பயம் வேண்டாம்: தேர்வு அறையில் பதட்டம் கொள்ள வேண்டாம். அமைதியும், கவனமும் தான் தேவை. கேள்விகள் வழக்கமானவையாகவே இருக்கும். வினாத்தாள் தயாரிப்பவர் தேர்வு கடினமாக அமைய வேண்டும் என விரும்புபவராக இருக்க மாட்டார். முறையாக தயார் செய்து கொண்டு வந்தால் பயப்பட தேவையில்லை. உங்கள் வேலையை திட்டமிடுங்கள், திட்டபடி செயல்படுங்கள். தன்னம்பிக்கையை விட வேண்டாம். வெற்றி உங்களுக்கே.
- பி.எஸ்.வாரியார்