ஜூலை 18, 2009 12:00 AM
ஜூலை 18, 2009 12:00 AM
மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலை எண்ணிக்கை அதிகரிப்பு என இந்தியா வேகமாக தொழில்மயமாகி வருகிறது. எனினும் தீ தடுப்பு
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நம்நாட்டில் குறைவாகவே உள்ளது.
தீ அபாயங்களை யாரும் உணர்வதில்லை. பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மை துறையில் பணிபுரிய முன் எப்போதையும் விட அதிக அளவிலான நிபுணர்களின் தேவை உள்ளது. இந்தியாவிலேயே தீ தடுப்பு முறைகள் குறித்து கற்றுத்தரும் முதல் நிறுவனம் குஜராத்தில் உள்ள ‘காலேஜ் ஆப் பயர் டெக்னாலஜி’ (சி.எப்.டி.,). இங்கு பி.எஸ்சி., பயர் படிப்பு வழங்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான படிப்புகளையும் இந்த கல்லூரி வழங்குகிறது.
இவற்றில் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு, பாதுகாப்பு, இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. குஜராத் பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி., பயர் படிப்பிலும் தீ தொடர்பான நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கற்றுத்தரப்படுகிறது.
பிரிட்டன் பல்கலைக்கழகமான லீட்சுடனும் கைகோர்த்துள்ளது, சி.எப்.டி., இங்கு இளநிலை கல்வியை முடிக்கும் மாணவர்கள் பலர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை தொடர்கின்றனர். பல்வேறு தீயணைப்பு நிலையங்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதனால் தீ தடுப்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன முன்னேற்றங்களை மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர். இதில் ஏற்படும் ஆபத்துகளை கருதி மாணவர்களின் பெயரில் விபத்து காப்பீடும் செய்யப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் துறையில் தேவை அதிகம் இருப்பதால் இந்த படிப்பை முடிப்பவர்கள் வேலைவாய்ப்பு குறித்து கவலைப்பட அவசியமில்லை. ராணுவம், ரயில்வே, ஓ.என்.ஜி.சி., சுத்திகரிப்பு, நகராட்சி ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசுத்துறைகளில் தொடக்க சம்பளமாக 8,000 ரூபாய் கிடைக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வழங்குகின்றன.
முன்னர் இது போன்ற படிப்புகள் இல்லை. ஆனால் வருங்காலத்தில் இந்த துறையில் நிபுணர்களின் தேவை அதிகம் என்பதால் இவ்வாறான படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் சேர அறிவியல், கணித பாடங்களுடன் பிளஸ் 2 நிறைவு செய்திருக்க வேண்டும். உடல் தகுதியும் சோதிக்கப்படும். இந்த படிப்பில் சேர கட்டணமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.