/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அவுட்சோர்சிங்கில் இந்தியாவுக்கே முக்கியத்துவம்
/
அவுட்சோர்சிங்கில் இந்தியாவுக்கே முக்கியத்துவம்
ஜூலை 18, 2009 12:00 AM
ஜூலை 18, 2009 12:00 AM
உலகளவில் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சியில் புகழ் பெற்ற ஏ.டி.கியர்னே நிறுவனம் இந்திய அவுட்சோர்சிங் குறித்த ஆய்வு ஒன்றை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் நமக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது.
சர்வதேச அளவில் ஐ.டி., மற்றும் பேக் ஆபிஸ் ஆப்ஷோர் பணிகளுக்கான விருப்பமாக இன்னமும் இருப்பது இந்தியா தான் என இந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. குறைவான கட்டணம், கவர்ச்சிகரமான நிதியமைப்பு, ஆரோக்கியமான வாணிபச் சூழல், திறன் வாய்ந்த பணியாளர்கள் போன்ற காரணங்களுக்காக பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் செய்வதை விரும்புகின்றன என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் அவுட்சோர்சிங்கில் முதல் 50 இடங்களிலுள்ள நாடுகளை இந்த நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவே இதில் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சீனாவும், 3வது இடத்தில் மலேசியாவும் உள்ளன. பிற நாடுகளில் சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக பொதுவாக நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் டாலருக்கு நிகரான பண மதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் ஆப்ஷோரிங்-ஹப்களாக மாறி வந்த அவை பின் தள்ளப்பட்டு விட்டன. மொத்தத்தில் 9 நாடுகள் இந்த கவர்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டன.
போலந்து, செக்கோஸ்லோவேக்கியா, ஹங்கேரி போன்ற நாடுகள் இதில் அடங்கும். ஆனால் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்தக் குறியீட்டில் முன்னேற்றம் கண்டுள்ளன. எகிப்து, ஜோர்டான், வியட்நாம் போன்ற நாடுகள் முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கின்றன.
ஐக்கிய அரபு நாடுகள், டுனீஷியா, மொராக்கோ போன்ற நாடுகளும் இந்தக் குறியீட்டில் முன்னேறியுள்ளன. வட ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளும் அவற்றின் கல்வியறிவு பெற்ற மக்கள் தொகையினாலும் ஐரோப்பாவிற்கு அருகிலிருப்பது போன்ற காரணங்களாலும் அவுட்சோர்சிங்கிற்காக பெரிதும் நாடப்படும் நாடுகளாக மாறியுள்ளன.
பி.பி.ஓ., பணிகளில் இந்தியாவும் பிலிப்பைன்சுமாக சேர்ந்து 50 சதவீத பங்கைப் பெற்றுள்ளன. பொதுவான கருத்துக்கு முரண்பாடாக பிலிப்பைன்சின் பங்கு இந்தியாவிலிருந்து பெரிதும் தள்ளியே உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கால் சென்டர் போன்ற செயல்பாட்டு மையங்களே அதிகம் உள்ளன. சீனா மற்றும் தெற்காசிய நாடுகளைப் போன்ற அசுர வளர்ச்சி விகிதம் இங்கு காணப்படவில்லை. இதில் இந்தியாவே முதலிடத்தில் நீடித்திருக்கிறது. பொருளாதாரப் பின்னடைவு நிலையிலும் இந்தியாவே முதலில் வெற்றிகரமாக வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா பி.பி.ஓ.,வில் போட்டியாளர் என்ற நிலையிலிருந்து விலகி பிற பகுதிகளிலும் இத்தொழிலை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான கருவியாக மாறியிருக்கிறது. இந்திய பி.பி.ஓ., நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்று சர்வதேச அளவில் பரவி வருவதுடன் பல நாட்டு முகமும் பெற்று முன்னேறி வருகின்றன.
டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் அமெரிக்காவின் டயர் 2 நகரங்களும் பி.பி.ஓ., பணிகளில் வளர்ச்சியடைந்துள்ளன. உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் அமெரிக்காவே உள்ளது. இதனாலேயே இங்கும் அவுட்சோர்சிங் பணிகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. கிட்டத்தட்ட இதே நிலை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளிலும் நிலவுகிறது.