ஆக 10, 2010 12:00 AM
ஆக 10, 2010 12:00 AM
துபாய் போன்ற அரேபியா நாடுகளில் ஆரம்பித்து அமெரிக்கா, ஐரோப்பா என உலக அளிவில் ஆர்க்கிடெக்டுகளின் தேவை இருக்க தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், இன்றைய நகர்ப்புறங்களின் அசுர வளர்ச்சியினால் ஏராளமான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் கட்டடங்களின் தேவை அதிகரித்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சியால் தங்களது வீடுகளை நவீன வடிவங்களில் அமைத்துக் கொள்ளும் ஆசையும் தேவையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் புதிய பிரமாண்ட அடுக்குமாடி கட்டடங்கள் பெருகி வருகின்றன. அழகுணர்ச்சியும் தனிப்பட்ட ரசனையும் சேரும்போது அங்கே அதிகம் தேவைப்படுவது தொழிலாளர்கள் மட்டுமல்ல, திறமை மிகுந்த ஆர்க்கிடெக்டுகளும் தான். இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையின் முதலீடு மட்டும் ஏறக்குறைய ரூபாய் 5 லட்சம் கோடி என்றால் இந்த துறையின் வளர்ச்சியை கணித்துக் கொள்ளலாம்.
வாகனங்களை நிறுத்துவதில் தொடங்கி அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்துஅம்சங்களையும் ஆர்க்கிடெக்டுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டடத்தை வடிவமைக்கிறார்கள். ஆர்க்கிடெக்சர் படிக்க பிளஸ் 2ல் கணிதமும் ஆங்கிலமும் அவசியம். பி.ஆர்க்., படிப்பு பொதுவாக 5 ஆண்டு படிப்பாக இருக்கிறது. வெகு சில நிறுவனங்களில் இந்த படிப்பானது பகுதி நேர படிப்பாக 7 ஆண்டுகள் வழங்கப்படுகிறது.
ஆர்க்கிடெக்சரில் பட்டப்படிப்பை முடிப்பவர் இதில் பட்ட மேற்படிப்பு எம்.ஆர்க்., படிக்கலாம். இதில் சிறப்புப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. நகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு, தொழிற்சாலை வடிவமைப்பு, பேரழிவு மீட்பு, லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் என பல சிறப்புப் படிப்புகள் உள்ளன. இதனால் ஆர்க்கிடெக்சர் படிப்பு முடிப்பவரை உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொள்ள பல நிறுவனங்கள் தயாராக உள்ளன.
ஆர்க்கிடெக்டுகள் கான்ட்ராக்டர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளாமல் நேரடியாக தங்களது சேவையைத் தருவது முக்கியமானது. நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு ஆர்க்கிடெக்டுகள் இப்போது தங்களது இடத்திலிருந்தே ஆலோசனைகளை தர முடிகிறது. தமிழகத்தில் டான்சாட் நுழைவுத்தேர்வு எழுதுவதன் மூலம் பி.ஆர்க் படிப்புகளில் சேரலாம்.
தமிழகத்தில் ஆர்க்கிடெக்டுகள் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
* அண்ணா பல்கலை கழகம் (எஸ்.ஏ.பி., வளாகம்)
* என்.ஐ.டி., திருச்சி
* மதுரை தியாகராசர் கல்லூரி
* பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்
* எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம்
* சத்தியபாமா பல்கலைக் கழகம்
* விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் இன்ஜினியரிங் கல்லூரி
* அதியமான் பொறியியல் கல்லூரி
* அருள்மிகு மீனாட்சி அம்மன் இன்ஜினியரிங் கல்லூரி
* முகமது சதக் இன்ஜினியரிங் கல்லூரி
