தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சமுதாயப் பணிகளை விரும்பும் இளைய சமுதாயம்

சமுதாயப் பணிகளை விரும்பும் இளைய சமுதாயம்

சமுதாயப் பணிகளை விரும்பும் இளைய சமுதாயம்


மார் 04, 2011 12:00 AM

மார் 04, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 04, 2011 12:00 AM மார் 04, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமூக சேவை செய்வது குறித்து ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக தற்போது இளைய சமுதாயத்தினர் பலரும் சுற்றுச்சூழல், வானிலை மாற்றம், தீவிரவாதம் போன்ற நாட்டை அச்சுறுத்தும் விஷயங்களுக்கு எதிராக பணியாற்ற விரும்புகின்றனர்.

முன்பெல்லாம் சமுதாயச் சேவை என்றாலே அறக்கட்டளைகளோ அல்லது சேவை அமைப்புகளோ தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தற்போது சமுதாயச் சேவை என்பது எல்லோரது கடமையும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

அதிலும் தற்போது சேவை செய்வதே முழு நேர பணியாகக் கிடைத்தால் சொல்லவும் வேண்டுமோ?

தற்போது சமூக பணியாளர்கள் அரசிடம் இருந்து நிதி உதவி, இட வசதி, அலுவலகப் பணிகள், கவுன்சிலிங், முகாம்கள் அமைத்துத் தருவது போன்ற பல உதவிகளைப் பெறுகின்றனர். சமூகப் பணிகள் 3 பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதாவது, சேவை மையங்கள், அமைப்புகள்,  நிறுவனத்தின் சமுதாயக் கடமை என்பனதான் அவை.

சேவை மையங்கள் என்பன, ஏழை எளியோருக்கு தேவையான உதவிகளை செய்து தருதல், உடல் ஊனமுற்றோருக்கு வேண்டிய உதவிகள் செய்தல், ஏழை மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தல், அநாதை இல்லங்களுக்கு உதவுதல், வயதானவர்களுக்கான இல்லங்களுக்கு உதவி செய்தல் போன்றவை அனைத்தும் சேவையின் கீழ் வரும்.

அமைப்புகளாக செயல்படுதல் என்பது, க்றை, மகளிர் சுய தொழில் அமைப்புகள் போன்று குழுவாக செயல்படுவதைக் கூறலாம். இது போன்ற அமைப்புகள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், மகளிர் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுத்தல் போன்ற பணிகளை செய்வதைத்தான் அமைப்புகளாக செயல்படுதல் என்பது குறிக்கிறது. இதற்கு இதே மனநிலைக் கொண்டவர்களை ஒன்றிணைத்து அமைப்பாக உருவாக்கி, நாட்டில் மனிதர்களுக்கு நடைபெறும் கொடுமைகளுக்கு எதிராக போராடுவதும், நாட்டின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வரும் கடமையும் இது போன்ற அமைப்புகளுக்கு உண்டு.

சேவை மையங்கள், அமைப்புகளை விட நிறுவனத்தின் சமுதாயக் கடமை என்பது முற்றிலும் மாறுபட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களை பயன்படுத்தாமை அல்லது பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை சில நிறுவனங்கள் தாங்களே முன்வந்து செய்கின்றன.

தங்களது பயன்பாட்டினால் கெட்டுப் போகும், காற்று, நீர் மற்றும் மாசுபட்டப் பொருட்களை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டத்தை சில நிறுவனங்கள் தாங்களே முன்வந்து செய்கின்றன. இவையும் நிறுவனத்தின் சமுதாய அக்கறையையேக் காட்டுகிறது.

தற்போது பல முன்னணி நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களுக்காக சமுதாய எண்ணம் கொண்ட அதே சமயம், அது குறித்து படிப்பறிவு கொண்ட பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதில் ஆர்வம் கொண்டுள்ளன.

ஏதேனும் சட்ட சிக்கலோ அல்லது பிரச்சினைகளோ ஏற்படுவதற்கு முன்பாக, இதுபோன்று சமூக பட்டப்படிப்புகளைப் படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், நிறுவனங்கள் எந்த விதிமுறை மீறல்களையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளும் வகையிலும் இந்த இளைஞர்கள் பணியாற்றுவார்கள்.

சமூக அக்கறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு, நிறுவனங்கள் குறித்த சட்டங்கள், அரசின் கொள்கைகள், சரியான வழிமுறைகள், நிறுவனத்தின் நடத்தையில் இருக்கும் ஏதேனும் தவறான வழிமுறைகளைக் கண்டறிந்து அதனைக் களைவதற்கான வழிமுறைகள் போன்ற பல விஷயங்கள் தெரிந்திருக்கும். எனவே இதனைக் கவனிக்க தனியாக ஒரு ஊழியரை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளது பல நிறுவனங்கள்.

இதுபோன்ற வேலைகளை எப்படிப் பெறுவது?

பொதுவாக பணியிடங்கள் என்பது அலுவலகமாகவோ, தொழிற்சாலையாகவோ இருக்கும். ஆனால் இதுபோன்ற சமூக அக்கறை என்பது நாம் நடக்கும் சாலையில் இருந்தே துவங்கும். நாம் வாழும் விதத்திலேயே சமூக அக்கறையும் இருக்கும். ஆனால் இதனை படிப்பாக படிக்க வேண்டும் என்றால் அதற்கு பாச்சுலர் ஆப் சோஷியல் ஒர்க் என்ற பட்டப்படிப்பை எடுத்துப் படிக்க வேண்டும். இதற்கு இணையான சில படிப்புகளையும் கல்லூரிகள் வழங்கி வருகின்றன. இதற்கு அடுத்த படியாக மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க் என்ற பட்ட மேற்படிப்பை படிக்கலாம்.

பொதுவாக இந்த பட்டப்படிப்புகள், ஆராய்ச்சிகள், படித்ததை செயல்முறையின் மூலம் புரிதல் போன்றுதான் அமையும். சில பட்ட மேற்படிப்புகளுக்கு, ஊதியத்தோடு கூடிய பணிகளைச் செய்யும் வாய்ப்பும் மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

இந்த சமுதாயத்திற்காக தங்களது முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், இந்த துறையிலேயே ஆராய்ச்சி செய்து பிஎச்டி முடிக்கலாம். பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

சமூக பட்டப்படிப்புகள் படித்த மாணவர்கள், வேலை தேடி அலைய வேண்டிய தேவையே இருப்பதில்லை. பல முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றம் கல்லூரிகள், இந்த மாணவர்களின் தேவைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளன. அவற்றின் மூலம், கல்லூரியில் படிக்கும் போதே பணிக்கான உத்திரவாதம் பல மாணவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது.

இதுபோன்ற பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் பலர், துவக்கத்திலேயே ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் நலன் பாதுகாப்பு, மருத்துவ சமூக பாதுகாப்புத் துறை, சமூக மேம்பாட்டுத் துறை, தொழிலாளர் நட்பு மேம்பாட்டுத் துறை என பலத் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பினையும் பெறுவார்கள்.

இந்திய அளவில் மட்டும் அல்லாமல், சர்வதேச அளவிலும், சமூக பட்டப்படிப்புகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி போன்ற மிகப்பெரிய அமைப்புகளும் இந்தத் துறையில் ஆட்களைத் தேர்வு செய்கிறது. ஏனெனில் இந்த அமைப்புகள் கையாளும் அகதிகள் மறுவாழ்வு, சமூகப் பணிகள், பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, நாட்டின் மேம்பாடு, முதியவர்கள் மற்றும் குழந்தைகள், உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றைக் கவனிக்க இதுபோன்ற இளைஞர்களின் தேவை இங்கு அதிகமாக உள்ளது.

சமூகப் பணியாளர்களாக வேண்டும் எனில், எல்லா மனிதர்களும், தங்களது உரிமைகளைப் பெற தகுதியானவர்களே என்ற எண்ணம் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் எவ்வாறு பேச வேண்டும், புதிய மனிதர்களுடன் நட்பு கொள்வது போன்றவை எளிதாக வர வேண்டும். பொறுமையும், சகிப்புத் தன்மையும், இந்த சமூகப் படிப்பிற்குத்  தேவையான மிக முக்கியமான தகுதிகளாகும்.

இவை அனைத்தும் இருந்து மொழித் திறமையும் (எழுதுதல் மற்றம் பேசுதல்) இருந்தால் இந்த பணிக்கு நீங்கள் தான் நிச்சயம் சரியான நபராக இருப்பீர்கள்.

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சைன்ஸ், டெல்லியில் உள்ள டெல்லி ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் போன்றவை இந்த படிப்பினை வழங்கும் சில முன்னணி கல்வி நிறுவனங்களாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us