ஜூலை 07, 2011 12:00 AM
ஜூலை 07, 2011 12:00 AM
நான் அறிவியல் பாடங்கள் படிக்கவா? இல்லை கம்ப்யூட்டர் , வர்த்தகம் தொடர்பான பாடங்களை படிக்கவா? என மற்றவர்களிடம் கேட்பவரா நீங்கள்? முதலில் அதை நிறுத்துங்கள். நன்கு ஆராய்ந்து நீங்களாகவே உங்கள் எதிர்காலத்தை எண்ணி முடிவு எடுங்கள். அதையும் சரியான நேரத்திற்குள் எடுங்கள். அடுத்தவர்களின் பேச்சை முடிவாக எண்ணாமல், ஒரு கருத்தாக நினைத்து சுயமாக முடிவு எடுங்கள்.
உங்களுக்கு விருப்பமானவை
உங்களுடைய ஆவல், திறமை, அனுபவத்தின் அடிப்படையில் விருப்பமான பாடங்களை தேர்வு செய்து படியுங்கள். அவ்வாறு படித்தால் மட்டுமே பாடத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களின் விருப்பத்திற்கிணங்க பாடங்களை தேர்வு செய்தால் மனமார படிக்க இயலாது. உங்களுக்கு ஏற்ற, விருப்பமான பாடத்தை படிப்பதன் மூலம் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதை நீங்களே உணர முடியும்.
ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள்
படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தை அதிகப் படுத்துங்கள். ஆர்வம் என்பது நீங்கள் எடுக்கும் தீர்மானத்தின் முழுமையான பகுதியாகும். நீங்கள் தேர்வு செய்ய நினைக்கும் பாடத்தின் மீதுள்ள நிறை, குறைகளை நீங்களாகவே சுட்டிக்காட்டுங்கள். அது அந்த படிப்பை ஆராய உதவியாக இருக்கும். மேலும் ஆலோசனை தேவை பெறும் பட்சத்தில் தகுந்த ஆலோசகரிடம் சென்று உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் "சீனியர்'களிடம் பேசுங்கள் நீங்கள் தேர்வு செய்ய நினைக்கும் படிப்பு பற்றி "சீனியர்'களிடம் கேளுங்கள். அப்படி செய்தால், தற்போதைய சூழலில் நீங்கள் தேர்வு செய்த படிப்பின் நிலை என்ன? வேலைவாய்ப்புகள் எப்படி? எதிர்காலத்தில் என்ன நிலை? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
பெற்றோர்களுடன் ஆலோசியுங்கள்
நீங்கள் படிப்பு தொடர்பாக தீர்மானம் எடுக்கும் போது பெற்றோரையும் இணைத்துக் கொள்ளுங்கள். எந்த பாடத்தை தேர்வு செய்யப் போகிறீர்கள்; அதை பற்றி நீங்கள் கேட்டறிந்த விஷயங்கள் உள்ளிட்ட வற்றை பெற்றோரிடம் கலந்து ஆலோசியுங்கள். அவர்கள் உங்கள் ஆர்வம், மற்றும் அக்கறையுடன் பேசும் போது முழுவதுமாக கேட்டு அவர்களுடைய கருத்தை புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய "சீனியர்' மற்றும் வல்லுனர்களிடம், பெற்றோருடன் செல்லுங்கள். இதனால் உங்கள் விருப்பத்தை பெற்றோரும் முழுவதும் உணர்வார்கள்.
இது உங்கள் வாழ்க்கை
இது உங்கள் வாழ்க்கை. அதை சிறப்பாக மாற்ற நீங்களாகவே முடிவு செய்யும் நேரம் இது. உங்களுடைய தேடலில் பெற்றோரை முதல் நிலையில் இருந்தே இணைத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தகுந்த முறையில் ஆராய்ந்து, நல்ல படிப்பை தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் படித்து வெற்றி பெறுங்கள்.
