தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?


மார் 31, 2016 12:00 AM

மார் 31, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 31, 2016 12:00 AM மார் 31, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.பி.பி.எஸ்., படிப்பதற்காக ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம்! இதற்கு முக்கிய காரணம், இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் காணப்படும் மருத்துவப் படிப்பு மீதான மோகம்!

மற்றொன்று, மருத்துவப்படிப்பின் மீதான ஆர்வத்திற்கேற்ப உரிய இடங்கள் இந்தியாவில் இல்லாதது. இந்தியாவிலேயே நிர்வாக இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவ சீட் பெற எவ்வளவு லட்சங்களை கொடுக்க வேண்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!

எனவே, இங்கு மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காதோர், ஆர்வமிகுதியாலும், வேறு வழியின்றியும், வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பது என்பது சில நொடிகளில் முடிவு எடுக்கக்கூடிய விஷயமல்ல. தெளிவான, சிறந்த முடிவே எதிர்கால பிரச்சனைகளை தவிர்க்கும்!

வளர்ந்த, பிரபல நாடுகளில் மருத்துவம் படிப்பதற்கு ஆகும் செலவுகளை நடுத்தர வர்க்கத்தினரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தான், கல்விக்கட்டணம் குறைவாக வசூலிக்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை யோசிக்கின்றனர். அத்தருணத்தில், ‘குறைந்த செலவில் வெளிநாடுகளில் மருத்துவப்படிப்பு’, கலை, அறிவியல் படிப்புக்கு ஆகும் செலவில் எம்.பி.பி.எஸ்.,’ என்றெல்லாம் ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் உலா வருகின்றன.

அந்த விளம்பரங்களில் பெரும்பாலும், ரஷ்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் சில ஐரோப்பிய, ஆசிய நாடுகள் இடம்பெறுகின்றன. இந்நாடுகளில் உள்ள குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் மருத்துவம் படிக்க ஆண்டுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 3.4 லட்சம் ரூபாய்) கல்விக்கட்டணம் செலுத்தினால் போதுமானது. சமாளிக்கக்கூடிய கல்விக் கட்டணத்தில் மருத்துவப் படிப்பு சாத்தியம் என்பதால், கண்களை மூடிக்கொண்டு மருத்துவம் படிக்க செல்வது சரியல்ல!

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஏன் நமது இந்தியாவிலும் கூட ஏராளமான போலி மற்றும் தரமற்ற கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. வளர்ந்த நாடுகளிலும் தரமற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன; வளரும் நாடுகளிலும் தரமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே, நாடுகளையும் கடந்து, நீங்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனங்களைப் பற்றிய தெளிவான அறிவு வேண்டும். குறைவான கல்விக் கட்டணம் என்பதை மட்டுமே பிரதானமாக வைத்து பார்க்கக்கூடாது!

* வெளிநாட்டுக் கல்வியில் எந்த நாடு சிறந்தது என்று மட்டும் யோசிக்கக்கூடாது; நாடுகளையும் கடந்து கல்வி நிறுவனங்களின் தரத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

* முதலில், ‘மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா’ (எம்.சி.ஐ.,) வரையறுத்துள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் பட்டியலில் அந்த கல்வி நிறுவனம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

* வெளிநாட்டு கல்வி ஆலோசகர்கள் என்ற போர்வையில் செயல்படும் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களின் முகவர்களை முழுவதுமாக நம்பிவிடக்கூடாது.

* அவர்கள் கூறும் ஆலோசனைகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் உண்மைதானா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களின் தரம், கல்விக்கட்டணம், தங்குமிடம், உணவு, உதவித்தொகை என பல்வேறு விஷயங்களையும் தெளிவாகவும், முழுமையாகவும் அறிந்துகொண்டு ஒரு கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதே சிறந்தது!

* அதற்கு, அந்த கல்வி நிறுவனங்களின் இணையதளம் மட்டுமின்றி, அந்நாட்டு தூதரகம் மற்றும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ கல்வித்துறை இணையதளங்களை நாடலாம். தேவைப்பட்டால், அதிகாரிகளை தொலைபேசியிலோ, இ-மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம். சில நாடுகள் தங்களது அதிகாரப்பூர்வ உயர்கல்வி ஆலோசனை மையங்களை இந்தியாவிலேயே இயக்குகின்றன. அம்மையங்களை நேரடியாகவும் தொடர்பு கொண்டும் சந்தேகங்களுக்கு தீர்வு பெறலாம்.

* கல்வி நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்களிடம் அவர்களது அனுபவங்களை கேட்பதும் நல்லது.

* முக்கியமாக, இந்தியாவில் காணப்படும் நோய்களும் அதற்கான சிகிச்சை முறைகளும் வெளிநாடுகளிலும் இருக்காது. எந்த வெளிநாட்டில் மருத்துவம் படித்தாலும், இந்தியாவில் பயிற்சி செய்ய எம்.சி.ஐ., நடத்தும் ‘ஸ்கீரினிங் டெஸ்ட்’ல் தேர்ச்சி பெற வேண்டும்.  எனவே, பாடத்திட்டம், செயல்முறைப் பயிற்சி ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு உங்களுக்கான சிறந்த கல்வி நிறுவனத்தை தெளிவாகவும், தைரியமாகவும் தேர்வு செய்யுங்கள். தரமான கல்வி நிறுவனத்தில் சிறந்த மருத்துவக் கல்வி பெற வாழ்த்துக்கள்!

-வி.சதீஸ் குமார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us