மே 09, 2024 12:00 AM
மே 09, 2024 12:00 AM

ருமேனியா அரசாங்கத்தின் கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், அந்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மொத்த உதவித்தொகைகளின் எண்ணிக்கை:
20
உதவித்தொகை சலுகைகள்:
உதவித்தொகை திட்டத்திற்கு தகுதிபெற்ற ஏதேனும் ஒரு ருமேனியா நாட்டு கல்வி நிறுவனத்தில் எந்தவித கல்விக்கட்டணம் மற்றும் சேர்க்கை கட்டணம் இன்றி, கல்வியை தொடர முடியும். இவைதவிர, உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு தங்குமிடம், மாத செலவினத்தொகை, மருத்துவ உதவி, சலுகை கட்டணத்தில் உள்நாட்டு போக்குவரத்து ஆகியவை வழங்கப்படுகின்றன.
கால அளவு:
படிப்புகளின் முழு கால அளவிற்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் ருமேனிய மொழியில் கற்பிக்கப்படுவதால், அம்மொழியை கற்றுக்கொள்வதற்கான காலத்திற்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிஎச்.டி., படிப்பை பொறுத்தவரை, ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் வழங்கப்படுவதால், தேவையின் அடிப்படையில் ருமேனிய மொழி கற்பதற்கான காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
*ருமேனிய நாட்டு குடியுரிமை அல்லது எந்த ஒரு ஐரோப்பிய நாட்டு குடியுரிமை பெற்றவராக இருத்தல் கூடாது.*ருமேனிய நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு குழுவிலும் இடம்பெற்றுள்ளவரது குடும்ப உறுப்பினராக இருத்தல் கூடாது.* ருமேனிய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே உதவித்தொகையுடன் படித்தவராக இருத்தல் கூடாது.* அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் உரிய கல்வித்தகுதியை பெற்றவராக இருத்தல் வேண்டும்.* இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு 35 வயதிற்கு மிகாமலும், பிஎச்.டி., படிப்பிற்கு 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய ஆவணங்களுடன் மின்னணு வடிவத்தில் es3.edu@nic.in எனும் இமெயில் முகவரி வாயிலாக ருமேனியா நாட்டு தூதரகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
www.education.gov.in மற்றும் https://studyinromania.gov.ro/