தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தேடினால் ஜெயம் உனக்கு!

தேடினால் ஜெயம் உனக்கு!

தேடினால் ஜெயம் உனக்கு!


மார் 22, 2016 12:00 AM

மார் 22, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 22, 2016 12:00 AM மார் 22, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழ்க்கை என்பதே தேடல்தான். ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு விதமான தேடல்கள். சூரிய கதிர்களின் உஷ்ண தேடலில்தான் பூமியில் உயிர்களுமாய், பயிர்களுமாய் ஜீவத்தேடல்!

கரடு, முரடான பாறைகளில் உளி நடந்து, நடந்து சிற்பமாய் சிரிப்பது கலைத்தேடல். குழந்தைப்பருவம் தொடங்கி குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் மாணவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் பல்வேறு திறன்களை கேள்விகளை, விடைகளை அறிய முனைப்புக் காட்டுவதுதான் அறிவுத்தேடல். இது சாமனியர்களையும், சாணக்கியன் ஆக்கும். இந்த தேடுகளம் தான் மாணவர்களின் எதிர்கால வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக, பள்ளி கல்லூரிகளில் கட்டமைக்கப்படுகிறது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

லட்சிய வேட்கையுடன் கூடிய தேடல்தான் சாதனையாளர்களை உருவாக்கும்! சிலந்தி, வலைப்பின்னி அதன் நடுவில் இரைக்காக பொறுமையாக காத்திருந்து வலையில் சிக்கும் பூச்சிகளை இரையாக்கிக் கொள்ளும். தான் பின்னிய வலையில் அது ஒரு பொழுதும் சிக்குவது இல்லை. தேடலுக்கான பொறுமையும், இலாவகமும் சிலந்தியிடமிருந்து மாணவர்கள் கற்க வேண்டிய பாடம். ஆனால் கற்க மறந்த பாடம்!

ஒரு துளி தேனுக்காக பல மைல்கள், பல மலர்கள் சிறகடித்து தேடும் தேனீயின் தேடல் வேட்கை மாணவர்களுக்கு வேண்டும். ஆர்வம், கவனம், வைராக்யம், நம்பிக்கை, மனஉறுதி, வேட்கை இந்த உத்திகளெல்லாம் சாதனைக்கு படிகளாகும்.

நீங்கள் தொலைகாட்சியில் மூழ்கி தொலைத்த நேரத்தை தேர்வு அறைக்குள் தேட முடியுமா? தேடினாலும் கிடைக்காது. கலிலியோ, எடிசன், நியூட்டன் இவர்களின் தேடல்தான் நமது வாழ்க்கையை அறிவியல் சாதனைகளால் அலங்கரித்திருக்கிறது!

சித்தார்தனின் உள்ளொளி தேடலே புத்தனாக வரலாறு பதித்திருக்கிறது. ஒழுக்கதையும், மனித மாண்பையும் போற்றுவதே கல்வியின் இலக்காக இருந்திருக்கிறது. சுயதேடலையும், சுயசிந்தனையையும் வளர்க்கும் ஆரோக்கிய கல்வி இன்று அருகி வருகிறதோ? என்ற அச்சம் கல்வியாளர்களிடையே எழுவது நிதர்சனம்.

இன்றைய கல்வி திசைமாறி, மனப்பாடத்திற்கும், மதிப்பெண்களுக்கும், பல்லாக்கு தூக்குவது காலத்தின் கட்டாயமா? இல்லை தலைமுறை சாபமா? பாட எல்லைகளை தாண்டி அறிவுத் தேடலின் எல்லையை விரிவுப்படுத்தி, புலன்களை கூர்மைப்படுத்தினால் வாய்ப்புகள் உங்களுக்கு வரமாகும்! வெற்றிகள் கரமாகும்!

“தேடல் உள்ளவனுக்கு எதுவும் சாத்தியம்; தேடல் உள்ளவரை நீங்கள் ஜெயிப்பது சத்தியம்”!

-எர்மின் இக்னேஷியஸ், தலைமையாசிரியை, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us