ஆக 03, 2026 06:31 PM
ஆக 03, 2026 06:31 PM

பாலிமர் மற்றும் பிளாஸ்டிக் பொறியியல் என்பது பிளாஸ்டிக் மற்றும் அதன் சேர்மவியல் உருவாக்கங்களை ஆய்வு செய்து, அவற்றின் உருவாக்கம், வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்தும் ஒரு முக்கியமான பொறியியல் துறையாகும். போக்குவரத்து, மருத்துவம், விமானப்படை, எலக்ட்ரானிக்ஸ், மென்பொருள் பேக்கேஜிங், வேளாண்மை மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் பாலிமர் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இளநிலை படிப்பு
பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் பொருட்களின் வடிவமைப்பு, உருவாக்கம், சோதனை, செயலாக்கம் மற்றும் பயன்பாடுகளை கற்பிக்கும் ஒரு தொழில்முறை வழிகாட்டியாக திகழ்கிறது. இப்படிப்பில் சேர்வதற்கு, 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியை பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய மூன்று பாடங்களையும் படித்திருக்க வேண்டும்.
முதுநிலை படிப்பு
மேம்பட்ட பாலிமர் வேதியியல், பாலிமர் எதிர்வினை பொறியியல், பாலிமர் ரியாலஜி, பாலிமர் செயலாக்க தொழில்நுட்பம், கூட்டுப் பொருட்கள், பாலிமர்களில் நானோ தொழில்நுட்பம், குணாதிசய நுட்பங்கள் மற்றும் பிளாஸ்டிக்கின் சுற்றுச்சூழல் அம்சங்கள் ஆகியவை முக்கியப் பாடத்திட்டங்களாக உள்ளன. இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் தொடர்புடைய இளநிலை பட்டங்களை குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
'கேட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் என்.ஐ.டி.,க்கள், ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றன. சில மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் பிரத்யேக நுழைவுத் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
வேலை வாய்ப்பு
பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், மெடிக்கல் எக்விப் மேக்கிங், அட்டைகள் மற்றும் பேக்கேஜிங் தொழில், வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் கேசிங், பைபர் கம்போசிட் உற்பத்தி, மற்றும் விமான துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பாலிமர் பொறியாளர், பிளாஸ்டிக் பதப்படுத்தும் பொறியாளர், தயாரிப்பு வடிவமைப்பாளர், பொருட்கள் விஞ்ஞானி, தரக் கட்டுப்பாட்டு பொறியாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியாளர், மற்றும் கருவி & டை வடிவமைப்பாளர்களாக பணியாற்றலாம்.
எதிர்கால வளர்ச்சி
உலகம் முழுவதும் மறுசுழற்சி பொருட்கள் மற்றும் பசுமை பிளாஸ்டிக் பற்றிய தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த துறையில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் விரிவடைந்து வருகின்றன. குறிப்பாக, உயிரியியல் சார்ந்த பாலிமர்கள், நானோ பாலிமர்கள், மருத்துவ உபகரணங்களுக்கான உயர் செயல்திறனுடைய பாலிமர்கள் போன்றவை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான மூலக்கற்களாக இருக்கின்றன. மேலும், 3டி அச்சிடும் தொழில்நுட்பம், ஸ்மார்ட் பாலிமர்ஸ் மற்றும் மென்மையான ரோபாட்டிக்ஸ் பொருட்களுக்கான பாலிமர் பயன்பாடுகள் வளர்ந்து வருவதால், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன.
