/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆராய்ச்சியுடன் கூடிய உயர்கல்வி வேண்டும்!
/
ஆராய்ச்சியுடன் கூடிய உயர்கல்வி வேண்டும்!
ஜூன் 11, 2025 12:00 AM
ஜூன் 11, 2025 12:00 AM

இன்றைய சூழலில் வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே ஏற்றத்தைத் தந்து விடாது. நாட்டின் தன்னிறைவுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஆராய்ச்சியுடன் கூடிய உயர்கல்வி அவசியம். அத்தகைய கல்வியை வழங்க, அனைத்து கல்வி நிறுவனங்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஒரு துறையில் பயிலும் மாணவர்கள், பிற துறைகள் சார்ந்த அறிவை பெறக்கூடிய வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும், ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட்டு, சிறப்பான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்களின் நலன்களையும், தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களும், பாடத்திட்டங்களை கற்பதோடு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
சமூகப் பொறுப்பு மற்றும் ஈடுபாடு, பல்வேறு மதிப்புமிக்க கற்றல் அனுபவங்களை வழங்குவதோடு, மாணவர்களின் தனித் திறன்களையும் ஊக்குவிக்கிறது. ஆகையால், பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் வாயிலாக, சமூக பொறுப்புடன் கூடிய தன்னார்வ பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். அத்தகைய அனுபவங்கள், தனிப்பட்ட வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளவும் உதவும்.
மாறிவரும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுதுணையாக, அனைத்து வகையிலும் மாணவர்களை தயார் செய்வது கல்வி நிறுவனங்களின் தலையாய கடமை. மேலும், மாணவர்களின் சிறப்பாக கற்றலுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் அவசியம். 
இத்தகைய முன்னெடுப்புகளை முறையாக செயல்படுத்துவதால் தான் எஸ்.என்.ஆர்., கல்வி நிறுவனங்கள், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிறுவங்களின் என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலில், தொடர்ந்து முக்கிய இடங்களை தக்க வைத்து வருகிறது. நாக் அமைப்பின் ஏ+ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப, 'சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனுபவ ரீதியிலான கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு துறையை சார்ந்த மாணவர்கள், பிறதுறையின் மாணவர்களோடு இணைந்து ஆராய்ச்சி செய்யவும் ஊக்கமளிக்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பல்வேறு 'ஹேக்கத்தான்' நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கெடுக்க உறுதுணையாகவும், உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
போட்டிகளும், சவால்களும் நிறைந்த இந்த காலக்கட்டத்தில், என்ன படிக்கிறோம் என்பதைக் காட்டிலும், எப்படி படிக்கிறோம் மற்றும் படித்ததை எப்படி செயலாக்குகிறோம் என்பதே அவசியம்.
- ஆர்.சுந்தர், நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை, கோவை.

