மொபைலை கீழே போடு - புத்தகத்தை எடு புதிய பிரசாரம் துவக்க கல்வித்துறை திட்டம்
மொபைலை கீழே போடு - புத்தகத்தை எடு புதிய பிரசாரம் துவக்க கல்வித்துறை திட்டம்
UPDATED : பிப் 22, 2026 11:52 AM
ADDED : பிப் 22, 2026 11:58 AM
பெங்களூரு:
கர்நாடகாவில், மாணவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தவும், மொபைல் போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும், 'மொபைலை கீழே போடு - புத்தகத்தை எடு' என்ற பிரசாரத்தை துவக்க, மாநில பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
சமீப காலமாக, மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனைங்களை, மாணவர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், பாடம் கற்பதில் ஆர்வமும், கவனமும் குறைகிறது. மன ஆரோக்கியத்திலும் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.
இந்தச் சூழ்நிலையில், மாணவர்கள் இடையே மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும்; அறிவு வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கவும், மாநிலம் முழுதும், 'மொபைலை கீழே போடு - புத்தகத்தை எடு' பிரசாரத்தை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக, பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நடப்பாண்டு மாணவர் சேர்க்கையின் போது, பள்ளிகள் அளவில், எஸ்.டி.எம்.சி., எனும் பள்ளி மேம்பாட்டு கண்காணிப்பு கமிட்டி மற்றும் பெற்றோர் கூட்டத்தை தவறாமல் நடத்த வேண்டும். இக்கூட்டத்தில் மொபைல் போன் பயன்பாட்டின் விளைவுகள் குறித்து, நிபுணர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகள் தங்கள் மொபைல் போனை எதற்காக பயன்படுத்துகின்றனர் என்பதை பெற்றோர் புரிந்து கொள்வதுடன், அவர்களது மொபைல் பயன்பாட்டு நேரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.
சாப்பிடும் போதும், உறங்குவதற்கு முன்னரும், மற்ற அன்றாட நடவடிக்கைகளின் போதும், பிள்ளைகள் மொபைல் போனை பயன்படுத்தாமல் இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
பிள்ளைகளுக்கு பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபட ஊக்குவிக்கலாம். அதாவது, வாசிப்பு அல்லது விளையாட்டு போன்ற ஆப்லைன் செயல்பாடுகள், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இருப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.
பெற்றோரும் மொபைல் போனை பயன்படுத்துவதை விடுத்து, பிற செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதால், தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்
பிள்ளைகளுடன் பெற்றோரும் அமர்ந்து, அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அல்லது சுறுசுறுப்பான செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.
பிள்ளைகளின் மொபைல் பயன்பாடு, அவர்களின் கற்றலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விழாக்கள், சமூக நல பள்ளி நிகழ்ச்சிகள், சுவரொட்டி தயாரித்தல், நடனம், உரைகள் போன்ற செயல்பாடுகளில் அவர்களை ஈடுபட வைத்து, மொபைல் போன் பயன்பாட்டை குறைக்கலாம்.
மொபைல் போனை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து சுகாதார துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்கள் நுாலகங்களை பயன்படுத்த ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி, வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
பின், அவர்களை படித்த புத்தகங்கள் மூலம் கதை சொல்லும் போட்டி, மதிப்பாய்வு எழுதுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம்
மன அழுத்தத்தை குறைக்க, தினமும் தியானம், யோகா செய்வதால் வாசிப்பதில் கவனம், ஆர்வத்தை அதிகரிக்கும்.
என்.சி.இ.பி., எனும், தேசிய மக்கள் தொகை கல்வி திட்டத்தின் கீழ், டி.எஸ்.இ.ஆர்.டி., எனும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இணையம் மற்றும் கேஜெட்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்த சுவரொட்டியின் அச்சிடப்பட்ட நகலை பதிவிறக்கம் செய்து, மாணவர்கள், பெற்றோர் பார்க்கும் வகையில் பள்ளியின் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

