புத்தகத்தை படிக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் நெகிழ்ச்சி
புத்தகத்தை படிக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் நெகிழ்ச்சி
UPDATED : செப் 14, 2024 12:00 AM
ADDED : செப் 14, 2024 11:31 AM
மதுரை:
ஒரு புத்தகத்தை தொட்டு நுகர்ந்து அதை படிக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது' என தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்தார்.
மதுரை புத்தக திருவிழா குறித்து அவர் கூறியதாவது:
16வது ஆண்டாக புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. மதுரை மக்களின் ஆதரவால் தொடர்ந்து நடத்த முடிகிறது. தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே குளிர்சாதன அரங்குகள் உள்ளன. அதில் மதுரையும் ஒன்று. மகாத்மா காந்தியிடம் ரூ.ஒரு லட்சம் கொடுத்து இதை வைத்து என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு நுாலகம் அமைப்பேன் என்றார்.
பகத்சிங்கிடம் துாக்கிலிட நேரமாகிவிட்டது என அழைத்த போது நான் ஒரு போராளியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், முடித்துவிட்டு வருகிறேன் என்றார். அப்போராளி ஒரு புரட்சியாளரின் புத்தகம்.
இவ்வாறு அனைத்து தரப்பு மக்களையும் புரட்டிபோடும் சக்தி புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. புத்தகங்கள் காகிதங்களால் ஆன சக்திவாய்ந்த ஆயுதமாகும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பதிப்பாளர்கள் சிறிது பாதிப்படைந்திருப்பது உண்மையே. ஒரு புத்தகத்தை தொட்டு நுகர்ந்து, அதை படிக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது. எனவே இப்புத்தகத் திருவிழாவிற்கு அனைவரும் வர வேண்டும். கட்டாயம் புத்தகம் படிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.