ஐந்து ஆண்டுகளில் மின்னணுக்கழிவு சதவீதம் அதிகரிப்பு: அரசு பள்ளி அறிவியல் கருத்தரங்கில் தகவல்
ஐந்து ஆண்டுகளில் மின்னணுக்கழிவு சதவீதம் அதிகரிப்பு: அரசு பள்ளி அறிவியல் கருத்தரங்கில் தகவல்
UPDATED : பிப் 06, 2026 01:43 PM
ADDED : பிப் 06, 2026 01:45 PM

கோத்தகிரி: நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளில் மின்னணு கழிவு, 73 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அறிவியல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, அரசு பள்ளிகளில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாநிலம் முழுவதும், 46 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோத்தகிரி அரவேணு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மஞ்சக்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
அதில், மாநில கருத்தாளர் ராஜூ சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் நம் நாட்டில் மின்னணு கழிவுகள், 73 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் 2050ல், கடலில் மீன்களின் எண்ணிக்கையை விட, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும், திடக்கழிவுகள் மேலாண்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பூஜ்ஜியம் திடக்கழிவு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
நமது உடல் நமக்கானது அல்ல. நமக்குள் இருக்கும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் தான், நமது உடல் நலத்தை நிர்ணயிப்பவை.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் பழங்கள் போன்ற உணவுதான் பாக்டீரியாக்களுக்கு பிடித்தமானவை. அத்தகைய உணவுகள் தான் பாக்டீரியாக்கள் நமது உடலை நலமாக வைத்து கொள்ள உதவும். துரித உணவு வகைகள், பொட்டலங்களில் வரும் உணவுப் பொருட்கள் நன்மை தரும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை சீரழிக்கிறது.
இதனால், பல உடல் நல சிக்கல்கள் உருவாகின்றன. நமக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை நாம் மதிக்கும் போது தான், நம்மை அது நலமாக வைத்துக் கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள் டாப்னி மார்கரெட், லலிதா மற்றும் ராஜூ ஆகியோர் தலைமை வகித்தனர். அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

