போலீஸ் எஸ்.ஐ., முதன்மை தேர்வு நீதிமன்றத்தில் அரசு தவறான வாதம் தேர்வர்கள் குற்றச்சாட்டு
போலீஸ் எஸ்.ஐ., முதன்மை தேர்வு நீதிமன்றத்தில் அரசு தவறான வாதம் தேர்வர்கள் குற்றச்சாட்டு
UPDATED : மார் 01, 2026 12:15 PM
ADDED : மார் 01, 2026 12:19 PM
மதுரை:
போலீஸ் எஸ்.ஐ., முதன்மை தேர்வில் தமிழ் சார்ந்த வினாக்கள் கேட்கப்படாதது குறித்த வழக்கில் அரசு தவறுதலாக கருத்துகளை பதிவு செய்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் டிச.,21ல் போலீஸ் எஸ்.ஐ., முதன்மை தேர்வு நடந்தது. பொது அறிவு, உளவியல் தொடர்பான வினாத்தாளில் உளவியல் பகுதியில் தமிழ், ஆங்கிலம், திறன் சார்ந்த வினாக்களில் தமிழ் மட்டும் இடம் பெறவில்லை.
இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகினர். குறிப்பாக தமிழ் வழி படித்தவர்களுக்கு 'போலீஸ் எஸ்.ஐ.,' கனவு கேள்விக்குறியானது. ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும் தமிழ் வழி படித்த மாணவர்களுக்கு பாதகமாகவும் உள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதை தொடர்ந்து தேர்வர்கள் இருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
நீதிமன்ற விசாரணையின் போது அரசு வழக்கறிஞர், தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் பாதிக்காது என வாதிட்டார். தவறுதலாக புரிந்துக் கொண்டதன் வெளிப்பாடாக அவரது வாதம் அமைந்தது. எங்களுடைய வாதம் தமிழ் சார்ந்த வினாக்கள் இடம் பெறாதது குறித்து.
தமிழ் வழி இட ஒதுக்கீடு என்பது ஒன்றாம் வகுப்பு முதல் இளங்கலை பட்டம் வரை தமிழ் வழியில் படித்தால் மட்டுமே 20 சதவீத ஒதுக்கீடு பெற முடியும். தமிழை ஒரு பாடமாக படித்த மாணவர்கள் பெற முடியாது. தமிழ் வினாக்கள் முதன்மை தேர்வில் இடம் பெறாதது தமிழக மாணவர்களை தான் பாதிக்கிறது. எனவே தமிழ் வினாக்களுடன் மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும்.
அரசு வழக்கறிஞர், தமிழ் தகுதி தேர்வில் 100 வினாக்கள் கேட்டு உள்ளோம் என வாதிட்டார். தமிழ் தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் வெறும் தகுதி மட்டுமே. முதன்மை தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்த்து கொள்ளப்படாது.
பெரும்பாலான தேர்வர்கள் தமிழக அரசு வெளியிட்ட பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து படித்து தான் தேர்வு எழுதினர். ஆனால் அதற்கு மாறாக பாடத்தில் இல்லாததை விடை குறிப்பாக தேர்வாணையம் வெளியிட்டு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
போலீஸ் துறையில் முதன்மை எழுத்து தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ., டூ இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு 'சீனியாரிட்டி' கணக்கிடப்படும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை தேர்வில் தமிழ் சார்ந்த வினாக்கள் கேட்கவில்லையே என்பதே எங்கள் ஆதங்கம்.
இவ்வாறு கூறினர்.

