குழந்தைகளிடம் அலைபேசி வழங்குவதை தவிக்க வேண்டும்: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அறிவுறுத்தல்
குழந்தைகளிடம் அலைபேசி வழங்குவதை தவிக்க வேண்டும்: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அறிவுறுத்தல்
UPDATED : அக் 30, 2026 06:15 PM
ADDED : அக் 30, 2026 06:18 PM
தேனி:
'பெற்றோர்கள் குழந்தைகள் தொந்தரவு செய்கிறார்கள் என கருதி அலைபேசிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் பேச்சு கொடுத்தால் தடங்கலின்றி பேசுவார்கள்,' தேனி என மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவு மட்டுமின்றி, முன்பருவ கல்வி, கர்ப்பிணிகள், தாய்மார்கள், பெண்களுக்கான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் பற்றி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரின் பணி பற்றி
மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல். அங்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், அத்தியாவசியஉணவு பொருட்கள், சத்துமாவு, முட்டை சரியாக வழங்கப்படுகிறதா, மையம் தினசரி செயல்படுகிறதா. தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு முறையாக விழிப்புணர்வு வழங்குவதை ஆய்வு செய்வது, அலுவலக நிர்வாக பணிகளை கவனிப்பது உள்ளிட்ட பணிகளாககும்.
அங்கன்வாடிகள் எத்தனை?
மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் தினசரி வருகை தருகின்றனர். அவர்களுக்கு தினசரி காலை 11:00 மணி, மதியம் 2:30 மணி அளவில் தலா 25 கிராம் எடையில் சத்துமாவு கொழுக்கட்டை அல்லது உருண்டை வழங்கப்படுகிறது. மதியம் 12:00 முதல் 12:30 மணிக்குள் மதிய உணவு வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது
குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான சத்தான உணவுகள் முட்டை,பருப்பு, கிழங்கு, பயறு வகைளுடன் வழங்கப்படுகிறது. வீடுகளிலும் பன்முகத்தன்மையுடன் உணவு வழங்க அறிவுறுத்துகிறோம். அதாவது ஒரே மாதிரியான உணவு வழங்காமல் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய உணவுகள் வழங்க வேண்டும். குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஒரே வகையான உணவுகளை அதிகம் வழங்க கூடாது. பேக்கிங் செய்த உணவுகள், குளிர்பான வகைகள் அதிகம் வழங்க கூடாது.
எந்த வயதில் அங்கன்வாடியில் சேர்க்க வேண்டும்
2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடிமையங்களில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இந்த குறிப்பிட்ட வயதில் குழந்தைகளின் மூளையில் நியூரான் வளர்ச்சி 85 முதல் 90 சதவீதம் இருக்கும். இது குழந்தைகளின் எதிர்கால சிந்தை திறனுக்கு முக்கியாகும்.
குழந்தைகள் அங்கன்வாடிக்கு வருகின்ற போது அவர்களுக்கு சரியான உணவு, முன்பருவக்கல்வி, அறிவு, உடல், மனம், மொழி, சமூக வளர்ச்சி, மற்றவர்களுடன் பழகும் சூழல் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.
இது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவும். செல்லமாக குழந்தைகளை வளர்ப்பதால் சிலர் அங்கன்வாடிக்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகள் நலனுக்காக அங்கன்வாடிகளுக்கு அனுப்ப வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கான விழிப்புணர்வு பற்றி
அங்கன்வாடிகள் மூலம் தாய், சேய் நலனிலும் கவனம் செலுத்துகிறோம். குழந்தை பிறக்கும் போது 2.5 கிலோ எடை இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகளிடம் 'ஈட் பார் டூ' அதாவது, குழந்தைகளுக்கும் உணவு எடுத்துக்கெள்ள அறிவுறுத்துகிறோம். ஊட்டசத்து மிகுந்த உணவுகள் எடுத்துக்கொள்ள கூறுகிறோம்.
கர்ப்ப காலத்தில் 'குரோத் ஸ்கேன்' குழந்தை வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள 'அனமலி ஸ்கேன்' குழந்தைகளின் உடல் உறுப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த இரு ஸ்கேன்கள் எடுத்து மருத்து ஆலோசனைகள் பெற வலியுறுத்துகிறோம்.
குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறதா.
அங்கன்வாடிகளில் இரு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கிறோம். மையத்திற்கு வராத குழந்தைகளை வீட்டிற்கு சென்று கண்காணிக்கிறோம். வயதிற்கு ஏற்ற எடை, உயரம் குழந்தைகள் வளர்ச்சியில் முக்கியம்.
தாய்மார்களுக்கு ஆலோசனை
தாய்பால் குழந்தைகள் வளர்ச்சியில் அத்தியாவசியமானது. குழந்தைகளுக்கு 2 வயது வரை கட்டாயம் தாய் பால் வழங்க வேண்டும். அதற்கு மேல் வழங்கினாலும் குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படும். அதே போல் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம். இந்த இடைவெளி தாய், சேய் நலனுக்கு முக்கியமாகும்.
சில மையங்கள் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறதே
மாவட்டத்தில் அரசு நிலங்கள் இல்லாத கிராமங்களில் மட்டும் வாடகை கட்டடங்களில் மையங்கள் செயல்படுகிறது. சுமார் 200 மையங்கள் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. சேதமடைந்த கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு புதிதாக அமைக்க, சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி பற்றி
குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்கள் கட்டாயம் சொல்லி கொடுக்கிறோம். சில மையங்களில் எண்கள், ஆங்கில எழுத்துக்கள், பெற்றோர் பெயர், முகவரி, ஆத்திச்சூடி சொல்லி கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகள் தொந்தரவு செய்கிறார்கள் என கூறி அலைபேசிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் பேச்சு கொடுத்தால் தடங்கலின்றி பேசுவார்கள். பொம்மைகளை உடைக்கிறார்கள் என கூறி வாங்கி கொடுக்காமல் இருக்க கூடாது. அது அவர்களது சித்தனை திறனை பாதிக்கும் என்றார்.
