உயிர் பயத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே? அதிருப்தியில் வேளாண் பல்கலை மாணவர்கள்
உயிர் பயத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே? அதிருப்தியில் வேளாண் பல்கலை மாணவர்கள்
UPDATED : நவ 14, 2024 12:00 AM
ADDED : நவ 14, 2024 12:54 PM

கோவை:
மத்திய அரசின் டிஜிட்டல் பயிர் சர்வே திட்டத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக கூறி மாணவர்கள் வேளாண் பல்கலை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் வகையிலும், நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் தொகுத்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில் தேசிய அளவில் வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் நடந்துவருகின்றன.
வருவாய் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் மேற்கொள்ளவேண்டிய பணிகள், இறுதிகட்டத்தில் வேளாண் பல்கலை மாணவர்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. கடந்த, 4ம் தேதி முதல் மாணவர்கள் அனைவரும் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சர்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை சர்வே பணியின் போது பாம்பு கடித்தும், ஒரு மாணவி குளவி கொட்டியதாலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது பெற்றோர் தரப்பில் கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் கூறுகையில், சர்வே பணிக்கு காலையில், 7:00 மணிக்கு கிளம்பும் மகள் மாலையில், 8:30க்கு மேல் வீட்டிற்கு வருகிறார். உடல் நிலை முடியாத சூழலிலும் வர கட்டாயப்படுத்துகின்றனர். எவ்வித பாதுகாப்பும் இல்லை. தற்போது, மாணவிகளை விஷப்பூச்சி கடித்துள்ளது. இப்பணியில் மாணவிகளை அனுப்பக்கூடாது. போகவேண்டாம் என நான் கூறினாலும், இறுதியாண்டு மதிப்பெண்களில் கைவைத்துவிடுவார்கள் என்று கூறுகிறாள், என்றார்.
மாணவர்கள் சிலர் கூறுகையில், எங்கள் வகுப்பில் மாணவர்களை குழுவாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வருகிறோம். அங்கு சென்றதும், ஒருவர், இருவர் என பிரிந்து, விவசாய நிலங்கள், வீடுகளில் தகவல் திரட்டுகிறோம், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் நெடுந்துாரம் நடக்கவேண்டியுள்ளது. வனவிலங்கு அச்சமும் உள்ளது. பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் சூழல் உள்ளது. மாதவிடாய் நாட்கள் உள்ள மாணவிகள் சிரமப்படுகின்றனர்.
எங்களிடம் ஒரு சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளனர்; மொபைல் போனுடன் குறிப்பிட்ட நிலத்தில் சென்றால் மட்டுமே தகவல்கள் அப்டேட் செய்ய இயலும். பல இடங்கள் புதர்மண்டி உள்ளதால், அதில் சர்வர் கிடைக்காமல் புதருக்குள்ளேயே நடந்து சென்று தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது. மேலும், முக்கிய தகவல்களை அலையாமல் அப்படியே போட்டுக்கொடுங்கள் என, வேளாண் அதிகாரிகளே சொல்கின்றனர். இப்பணியை மேற்கொள்ள எங்களால் இயலவில்லை. பல்கலை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம், என்றார்
வேளாண் பல்கலை ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் ரவீந்தரனிடம் கேட்டபோது, மாணவி ஒருவருக்கு பூச்சி கடித்துள்ளது; தற்போது நலமாக உள்ளார். பாம்பு கடித்ததா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து ரத்த பரிசோதனை எடுத்ததில் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டாயப்படுத்துகின்றோம் என்பது உண்மையல்ல; இன்று கூட (நேற்று) 160 மாணவர்கள் வரவில்லை. பர்மிஷன் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.