வீடு பக்கத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கி தர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
வீடு பக்கத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கி தர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
UPDATED : பிப் 12, 2026 02:09 PM
ADDED : பிப் 12, 2026 02:12 PM
கோவை:
பிளஸ் 2 பொது தேர்வுகள் அடுத்த மாதம் நடக்க உள்ள சூழலில், களப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த பள்ளிக்கல்வி துறை தயாராகி வருகிறது.
முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் சிறப்பு குழு அமைத்து பள்ளி மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை குறித்து பாட வாரியாக பட்டியல் தயாரிக்கின்றனர்.
பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் தர்மலிங்கம் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது இரு ஆசிரியர்கள் வீட்டில் இருந்து, 22 கி.மீ., தொலைவில் உள்ள தேர்வு மையத்துக்கு நியமிக்கப்பட்டனர். காலை 08:30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்பதால் விரைந்து சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
அரசு வழிகாட்டு நெறிகளின்படி வீட்டில் இருந்து 10 கி.மீ., தொலைவுக்குள் உள்ள தேர்வு மையத்தில் பணி வழங்க வேண்டும். அப்போது பணிகள் எளிதாகவும் திருப்திகரமாகவும் இருக்கும்.
இவ்வாறு தர்மலிங்கம் கூறினார்.
பணியமர்த்தும் குழுவிலுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது:
அனைவருக்கும் வீடு அருகில் தேர்வு மையங்கள் அமையுமா என்பது கேள்விக்குறி. பணி அனுபவம், பயணிக்கும் தொலைவு, உடல்நிலை போன்ற விவரங்கள் திரட்டி பரிசீலனை செய்து தான் மையம் ஒதுக்கும் பணி செய்கிறோம். சிபாரிசுகளுக்கு இடமளிக்க மாட்டோம். வெளிப்படையாக இருக்கும்.

