நீட் தேர்வு முடிவு வெளியீடு:தமிழக மாணவர் தேசிய அளவில் முதலிடம்
நீட் தேர்வு முடிவு வெளியீடு:தமிழக மாணவர் தேசிய அளவில் முதலிடம்
UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 03:40 AM
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடுமுழுதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை சார்பில் கடந்த மாதம் 7 ம் தேதி 13 மொழிகளில் நடத்தப்பட்டது. 499 நகரங்களில் நடைபெற்ற தேர்வில் 20.38 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வை 30,536 பேர் தமிழிலும் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் neet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு கடினம் அல்ல:பிரபஞ்சன் பேட்டி
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அருகே உள்ள மேல்ஓலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபஞ்சன். இவர் 10 ஆம் வகுப்பு வரையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றுள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே மொத்த மதிப்பெண்களான 720க்கு 720 எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பிரபஞ்சன் கூறுகையில், நீட் தேர்வு கடினம் என்ற மன நிலையில் இருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டும் என்றார்.
தமிழகம் ஆந்திரா மாணவர்கள் முதலிடம்
தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த போரா வருண்சக்கரவர்த்தி ஆகிய மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 4 பேர் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நீட் தேர்வை தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதினர். இதில் 78,693 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்னும் மாணவர் 99.99 மார்க்குள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
