உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்தால் பள்ளிகளில் ஹிஜாப் அணிய அனுமதி
உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்தால் பள்ளிகளில் ஹிஜாப் அணிய அனுமதி
UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:20 AM
பெங்களூரு:
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தால், பள்ளி, கல்லுாரிகளில் மாணவியர் &'ஹிஜாப்&' அணிய அரசு அனுமதி அளிக்கும் என, மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., அரசு, பள்ளி, கல்லுாரி வளாகத்தில் முஸ்லிம் மாணவியர், ஹிஜாப் அணிய தடை விதித்தது. சீருடை அணிவது கட்டாயம் என, உத்தரவிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து மாணவியரும், சிறுபான்மையின அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. பலர் தேர்வையும் புறக்கணித்தனர்.சில மாணவியர், கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினர். உயர் நீதிமன்றமும், அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் விதிகளை பின்பற்ற வேண்டும் என, உத்தரவிட்டது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்துள்ளனர். தற்போது காங்கிரஸ் அரசு, ஆட்சிக்கு வந்தபின், பள்ளி, கல்லுாரி வளாகத்திலும் ஹிஜாப் அணிய அனுமதியளிக்கும்படி, பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:
பள்ளி, கல்லுாரி வளாகங்களில், மாணவியர் ஹிஜாப் அணிவது குறித்து, உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை, மாநில அரசு பின்பற்றுவது அவசியம். ஹிஜாப் அணிய அனுமதியளித்தால், நாங்களும் அனுமதி அளிப்போம்.கர்நாடக தேர்வு ஆணையம் போன்ற மாநில அரசு அமைப்புகள் நடத்தும் நியமனங்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு ஆஜராகும் மாணவியர், தேர்வு நேரத்தில் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
