பள்ளியில் தராத மதிப்பெண் சான்றிதழ் மாணவியின் கல்லூரி படிப்புக்கு சிக்கல்
பள்ளியில் தராத மதிப்பெண் சான்றிதழ் மாணவியின் கல்லூரி படிப்புக்கு சிக்கல்
UPDATED : நவ 17, 2023 12:00 AM
ADDED : நவ 17, 2023 04:58 PM
சேலம்:
ஓமலுார் அடுத்த காமலாபுரம், மேல்தடம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகள் ஸ்ரீமதி, 17. இவர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
தாரமங்கலம் அருகே சிக்கனம்பட்டி தனியார் கலை, அறிவியல் கல்லுாரியில் பி.காம்., முதலாண்டு படிக்கிறேன். இதற்கு முன் ஓமலுாரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 சி குரூப் தமிழ் வழியில் படித்தேன். அப்போது எனக்கு வழங்க வேண்டிய செய்முறை மதிப்பெண் வழங்கவில்லை. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது என் அசல் பிளஸ் 1 மதிப்பெண் சான்றிதழை பெற்று சென்னைக்கு அனுப்பினர். 4 மாதங்களாகியும் பதில் இல்லை. பள்ளிக்கு சென்று பலமுறை கேட்டும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கின்றனர்.இதனால் சேலம் கோட்டையில் உள்ள அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அவர்களும், சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கிருந்து மதிப்பெண் சான்றிதழ் வந்ததும் வழங்குவோம் என, பதில் அளிக்கின்றனர். தற்போது மதிப்பெண் சான்றிதழ் கேட்டு கல்லுாரியில் நெருக்கடி தருகின்றனர். இல்லையெனில் படிப்பை தொடர முடியாது என கூறுவதால் மதிப்பெண் சான்றிதழை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.
