தீரன் சின்னமலை புகழை பரப்ப பல்கலையில் இருக்கை: அண்ணாமலை வலியுறுத்தல்
தீரன் சின்னமலை புகழை பரப்ப பல்கலையில் இருக்கை: அண்ணாமலை வலியுறுத்தல்
UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:10 AM
ஈரோடு:
தீரன் சின்னமலை புகழ், இந்தியா முழுதும் செல்ல வேண்டும். தீரன் சின்னமலை வரலாற்றை, வரலாற்று படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்களில் இதற்கான இருக்கையை உருவாக்க வேண்டும், என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில், தீரன் சின்னமலை, 219வது நினைவேந்தல் கூட்டம், ஈரோடு மாவட்டம் அரச்சலுார் அருகே ஜெயராமபுரத்தில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் மன்றாடியார் தலைமை வகித்து பேசினார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கொங்கு பேரவை தலைவர் ராமசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் விடியல் சேகர், செல்வி முருகேசன், பா.ஜ. பிரமுகர்கள் சசிகலா புஷ்பா, நாகராஜ், கார்வேந்தன், எஸ்.ஆர்.சேகர், ஏ.பி.முருகானந்தம், எம்.எல்.ஏ., சரஸ்வதி, மாவட்ட தலைவர் வேதானந்தம் பங்கேற்றனர்.
கூட்டத்தில், திருப்பூர் எவரெடி குரூப் ஆப் மில்ஸ் சேர்மன் சுப்பிரமணியம், ராஷ்ட்ர சேவிகா சமிதி செயலாளர் -- தமிழகம், கேரளா, கீதா, மக்கள் மருந்தகத்தை சேர்ந்த ரவீந்திரன், தேசிய இயற்கை மருத்துவ நிறுவன ஆட்சிமன்ற குழு உறுப்பினர் நிவேதா, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி ஆகியோருக்கு, தீரன் சின்னமலை வீர விருது வழங்கப்பட்டது.
பழநி சாது சாமிகள் திருமடத்தை சேர்ந்த மடாதிபதி சாது சண்முக அடிகளார், அவல்பூந்துறை பைரவ பீடம் விஜய் சுவாமி அருளாசி வழங்கினர். நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விருதுகளை வழங்கி பேசியதாவது:
தீரன் சின்னமலை ஒரு முறை அல்ல, மூன்று முறை ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றவர். தீரன் சின்னமலை தேசியவாதியாக செயல்பட்டுள்ளார். இந்திய சுதந்திரத்துக்காக நட்புணர்வுடன் செயல்பட்டுள்ளார். அரவக்குறிச்சியில் அவரது படைக்கலன் கருவிகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
குணாளன் நாடார், பொல்லன் போன்றோரை தன் படையில் வைத்திருந்தார். தீரன் சின்னமலை புகழ், இந்தியா முழுதும் செல்ல வேண்டும். தீரன் சின்னமலை வரலாற்றை, வரலாற்று படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்களில் இதற்கான இருக்கையை உருவாக்க வேண்டும். அப்போது தான் ஆராய்ச்சிகள் நடக்கும். வரலாறாக மாறும். தீரன் சின்னமலை கூட்டமைப்பினர் இதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பா.ஜ., வெளியில் இருந்து உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.