திறன் குறைந்த பள்ளி மாணவர்களுக்கு இனி கல்லுாரி மாணவர்களே ஸ்க்ரைப்
திறன் குறைந்த பள்ளி மாணவர்களுக்கு இனி கல்லுாரி மாணவர்களே ஸ்க்ரைப்
UPDATED : பிப் 16, 2026 12:41 PM
ADDED : பிப் 16, 2026 12:46 PM
கோவை:
'ஸ்க்ரைப்' திட்டத்தின் கீழ் அரசு பொதுத்தேர்வு எழுதும், 1,200 மாணவர்களுக்கு தகுதியான கல்லுாரி மாணவர்களை தேர்வு செய்யும் பணிகள் கல்லுாரிகளில் நடக்கின்றன.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுத முடியாத சூழலில் உள்ள, கைகள் முறிந்த, நரம்புத்தளர்ச்சியுடைய மாணவர்களுக்கு பதிலாக அரசு தேர்வு எழுதுபவர்களையே 'ஸ்க்ரைப்' என்கின்றனர்.
இது வரை ஆசிரியர்களை 'ஸ்க்ரைப்' களாக நியமித்து தேர்வு எழுதி வந்தனர். அதில் சில புகார்கள் எழுந்ததால், ஆசிரியர்களை ஸ்க்ரைப்களாக நியமிக்க தடைவிதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக கல்லுாரியில் படிக்கும் மாணவர்களை நியமிக்க, பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இப்பணிக்கு அரசு தேர்வு மையத்துக்கு அருகே சுற்றுப் பகுதியிலுள்ள கல்லுாரி மாணவர்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதன்படி கோவையிலுள்ள அரசு தேர்வு மையங்களை சுற்றியுள்ள கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரிகளில், 'ஸ்க்ரைப்' மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி உள்ளிட்ட பல கல்லுாரிகளில் 'ஸ்க்ரைப்'புக்கான கல்லுாரி மாணவர் தேர்வு நடந்தது.
கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,யில், 857 மாணவர்களும், பிளஸ் 2 வில், 343 மாணவர்கள் வீதம், 1,200 பேர் ஸ்க்ரைப் தேவைப்படுவோர்.
இவர்கள் அனைவருக்கும் ஸ்க்ரைப் தேர்வு செய்யும் பணிகள் கோவையிலுள்ள, 30 கலை அறிவியல் கல்லுாரிகளில் நடந்து வருகிறது.

