கோட்டையை முற்றுகையிட முயற்சி ஜாக்டோ - ஜியோவினர் 2,500 பேர் கைது
கோட்டையை முற்றுகையிட முயற்சி ஜாக்டோ - ஜியோவினர் 2,500 பேர் கைது
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:38 AM
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட சென்ற, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த, 500 பெண்கள் உட்பட, 2,500 பேரை, போலீசார் கைது செய்தனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில், கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இதில் பங்கேற்பதற்காக, நேற்று காலை சென்னை சிவானந்தா சாலையில், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திரண்டனர்; அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அதன்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைச் செயலகம் சென்று, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்து பேசினர். முதல்வரை சந்திக்க அனுமதி கோரினர். தற்போது, சந்திக்க இயலாது எனக் கூறியதால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களிடம், கோரிக்கையை நிறைவேற்றும் வரை, கோட்டையை முற்றுகையிடுவோம் எனக் கூறி, தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டனர்.அவர்களை, போலீசார் தடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற, 500 பெண்கள் உட்பட 2,500 பேர் கைது செய்யப்பட்டனர்.தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கோரிக்கைகள் என்ன?
*அரசு பணியில், 2003 ஏப்., 1க்கு பின் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்* காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்* இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர்; உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்* சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறை துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.