மருத்துவ படிப்பு டிபாசிட்டை திருப்பி தராமல் இழுத்தடிப்பு
மருத்துவ படிப்பு டிபாசிட்டை திருப்பி தராமல் இழுத்தடிப்பு
UPDATED : ஜன 12, 2025 12:00 AM
ADDED : ஜன 12, 2025 10:21 AM

சென்னை:
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர விண்ணப்பித்தவர்கள் செலுத்திய வைப்புத் தொகையை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் திரும்ப தராமல் இழுத்தடிக்கிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.
அரசு ஒதுக்கீடு
அதன்படி, 9,050 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 2,200 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 42,957 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் துவங்கி, ஓரிரு மாதங்களில் முடிவடைந்தது.
மாணவர் சேர்க்கைக்கு, திரும்ப பெறக்கூடிய வகையில், அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்கள், 30,000 ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தினர்.
மேலும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்த பின், நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தியுள்ளனர். கவுன்சிலிங் முடிந்த பின், சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்திய பணம் வரவு வைக்கப்படும்.
கவுன்சிலிங் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், மாணவர்களின் பணத்தை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் விடுவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, மருத்துவ மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தோம். கவுன்சிலிங் முடிந்த நிலையில், மற்ற மாநிலங்களில் செலுத்திய வைப்புத்தொகையை, அந்தந்த மருத்துவ கல்வி இயக்ககங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுவித்து விட்டன.
அதேநேரம், தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம், விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை திரும்ப செலுத்தாமல் உள்ளது. மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்த பின், அக்கல்லுாரிக்கான கல்வி கட்டணமாக கூட, அந்த தொகையை நேர் செய்யாமல் உள்ளனர். பலர் கடன் வாங்கி தான், மருத்துவ கல்வி கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
அப்பணத்தை விரைந்து விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.