UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 05:05 PM
புதுடில்லி:
ஒரே நேரத்தில் பல அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக் கூடிய, அக்னி - 5 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணை சோதனைகளில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது. நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடிய அக்னி வகை ஏவுகணைகளை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டி.ஆர்.டி.ஓ., தயாரித்து உள்ளது.இதன்படி, இதுவரை வெளிவந்துள்ள, அக்னி -1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள், 350ல் இருந்து, 3,500 கி.மீ., தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. இதன் அடுத்தகட்டமாக, அக்னி - 5 ஏவுகணை தயாரானது. 3,500 கி.மீ.,யை தாண்டி சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை, ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.தற்போது, எம்.ஐ.ஆர்.வி, எனப்படும், மல்டி இன்டிபென்டட்லி டார்கடெபிள் ரீயென்ட்ரி வெகிக்கிள் எனப்படும், ஒரே நேரத்தில், பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன், அக்னி - 5 ஏவுகணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, 5,000 கி.மீ.,க்கும் அதிகமான துாரத்தில் உள்ள இலக்கையும் தாக்கக் கூடியது.கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அக்னி - 5 ஏவுகணையை இந்தியாவில் மத்திய பகுதியில் இருந்து செலுத்தினாலும், சீனாவின் வடக்கு எல்லை வரை தாக்க முடியும். ஆசியா முழுதும், ஐரோப்பாவின் சில பகுதி வரை செலுத்த முடியும்.மிஷன் திவ்யாஸ்த்ரா என்ற பெயரில் இந்த திட்டம் நடந்து வந்தது. அதாவது, ஒரே ஏவுகணையில், பல அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று, ஆங்காங்கு உள்ள இலக்குகளை தாக்க முடியும். அதுவும் மிகத் துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் உள்ளது இந்த ஏவுகணை.இதன் பயன்பாட்டு சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்ததாக, டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வைத்துள்ளன. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கடற்பகுதிக்கு அருகே சீனாவின் உளவு கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அக்னி - 5 ஏவுகணை சோதனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.