பி.எஸ்.ஜி., கல்லூரி திறப்பு: ஏராளமான மாணவர்கள் புறக்கணிப்பு
பி.எஸ்.ஜி., கல்லூரி திறப்பு: ஏராளமான மாணவர்கள் புறக்கணிப்பு
UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி, 10 நாட்களுக்குப் பின் ஆகஸ்ட் 19ம் தேதி திறக்கப்பட்டது.
அரசு உதவி பெறும் முதுநிலை பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள், பலர் வகுப்பை புறக்கணித்தனர்.
கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, மருத்துவ கல்லூரி, நர்சிங் கல்லூரி, பாராமெடிக்கல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை ஒருங்கிணைத்து தனியார் ஒருமை பல்கலையாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கல்லூரி மாணவ,மாணவியர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதைக்கண்டித்து பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் 800க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கடந்த 8ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆக.,17ம் தேதி வரை கல்லூரி, விடுதி மூடப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் அனைத்து சுயநிதி பாடப்பிரிவு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் முதுநிலை பிரிவுகளுக்கும் வகுப்புகள் ஆக.,18ல் துவங்கும் என கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது. மேலும், கல்லூரிக்கு வரும் மாணவர்கள், தங்களது பெற்றோரையும் அழைத்து வர வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சுய நிதி பாடப்பிரிவு மாணவர்களும் 19ம் தேதி கல்லூரிக்கு வந்தனர். பெரும்பான்மையான அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்; 1,400 மாணவர்களின் பெற்றோருக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் வெறும் 30 பெற்றோரே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன், கல்லூரி முதல்வர் ஷீலா ராமச்சந்திரன் 45 நிமிடம் பேசியுள்ளார்.
பின், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் 120 பேருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது,‘ மாணவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் நல்வழி காட்ட வேண்டும்; கல்லூரி பல்கலையாக தரம் உயர்த்தப்படுவது பற்றிய முடிவு ஏதும் நம் கையில் இல்லை. அது அரசு மற்றும் கல்லூரி நிர்வாகம் எடுக்கும் முடிவு,” என்றார்.

