மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் தொடர் புறக்கணிப்பு
மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் தொடர் புறக்கணிப்பு
UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 10:43 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் தொடர் புறக்கணிப்பில் ஈடுப்பட்டுவருகின்றனர்.
திருச்சுழி அருகே ரெங்கையன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. 72 மாணவ, மாணவியர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி ஆங்கில ஆசிரியர் நீராத்துலிங்கம் ஒழுங்காக பள்ளிக்கு வருவது இல்லை. ஆங்கில பாடத்தில் மாணவர்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதை, பெற்றோர்கள் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமியிடம் புகார் கூறினர். தலைமை ஆசிரியர் ஆங்கில ஆசிரியரை கண்டித்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர்மக்களும் ஆங்கில ஆசிரியரை கண்டித்துள்ளனர்.
பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. தகவல் அறிந்த டி.இ.ஓ., டென்னிஸ், ஏ.இ.ஒ., இந்திராணி, ஆசிரியை மாறுதல் செய்யப்படுவார் என, பெற்றோர்களிடம் உறுதி அளித்தனர். இந்நிலையில், கடந்த 28 ம் தேதி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த வாரம் இந்த பிரச்சனை நடந்தது. ஆனால், பெற்றோர்கள், ஆசிரியரை மாற்றும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி, நேற்றும் பள்ளிக்கு அனுப்பவில்லை.
ஏ.இ.ஒ., இந்திராணி, "ஆங்கில ஆசிரியர் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை. அதிக விடுமுறை எடுத்துள்ளார். ஆங்கில பாடத்திலும் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். இதனால், பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. டி.இ.ஓ., உடன் சென்று பெற்றோர்களை சமாதானம் செய்தோம். மேலும், ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
திருச்சுழி தாசில்தார் ரெங்கநாதன், "பெற்றோர்கள் ,ஆசிரியரை இடமாற்றம் செய்தால்தான், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்றனர். ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் வந்து விடுவாரோ என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆசிரியர், பள்ளி வேலை நாட்களில் 45 நாட்களுக்கு 16 நாட்கள் தான் வந்துள்ளார். ஆசிரியர் உறுதியாக இடமாற்றம் செய்யப்படுவார்" என்றார்.
