தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுப்பணி துறைதான் பதிலளிக்க வேண்டும்: கல்லுாரி முதல்வர்

பொதுப்பணி துறைதான் பதிலளிக்க வேண்டும்: கல்லுாரி முதல்வர்

பொதுப்பணி துறைதான் பதிலளிக்க வேண்டும்: கல்லுாரி முதல்வர்


UPDATED : ஜன 27, 2015 12:00 AM

ADDED : ஜன 27, 2015 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2015 12:00 AM ADDED : ஜன 27, 2015 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநில கல்லுாரியின் விக்டோரியா விடுதியில் நிலவும் பல பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. இதற்கு, பொதுப்பணி துறைதான் பதிலளிக்க வேண்டும், என, கல்லுாரி முதல்வர் கூறியுள்ளார்.

சென்னை மாநில கல்லுாரியின், விக்டோரியா மாணவர் விடுதியில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்களில், 30க்கும் மேற்பட்டோர், கண், காது, வாய் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் அனைவரும், சென்னை மாநில கல்லுாரியில் படிப்போர். அங்குள்ள, உணவறை, வசிப்பறை, குளியலறை, கழிப்பறை என, எல்லாமும், ஒரு மாணவன் பயன்படுத்துவதற்கும், வசிப்பதற்கும் தகுதியற்ற நிலையில் காணப்படுகின்றன.

கடந்த, 2014, செப்.,7ம் தேதி, திறந்தவெளி குளியல்; பெயர்ந்து விழும் காரைப் பூச்சு; மாநில கல்லுாரியின் அவலம் மாறுவது எப்போது? என்ற தலைப்பில், தினமலர் நாளிதழில் படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, விடுதி சீரமைப்புக்கு, ஒப்பந்தம் விடப்பட்டதாக, கல்லுாரி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், இன்று வரை, அதன் நிலைமை யில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. விக்டோரியா விடுதி கட்டடம், பாரம்பரிய கட்டட பட்டியலில் இருப்பதால், அதன் பராமரிப்பு, இதுவரை திரிசங்கு சொர்க்கம்தான்.

என்ன நடந்திருக்கிறது?

* தினமலர் செய்திகளுக்கு பின், விடுதி வளாகத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற, தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உடைந்த குழாய்களுக்கு பதில், புதிய குழாய்கள் போடப்பட்டன.

* விடுதிக்கு அருகில் மலைபோல் குவிக்கப் பட்டிருந்த, மண் குவியலில் பாதி, கழிவுநீர் தேங்கிய இடத்தில் போட்டு மூடப்பட்டது.

* மாணவர்களுக்கு, போதிய குளியலறை இல்லாததால், திறந்தவெளியில் நின்று குளித்து கொண்டிருந்தனர். அதனால், அந்த இடமே, சகதியாக காட்சி அளித்தது. தற்போது, அவர்கள் நின்று குளிக்கும் இடத்தில், சீரற்ற முறையில், சிமென்ட் தளம் போடப்பட்டிருக்கிறது. அதனால், குளிக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல், அந்த தளத்தை சுற்றிலும் தேங்குகிறது.

* அனைத்து மாணவர்களும், காலையில் குளிக்கும்போது, சில நாட்களில், தண்ணீர் பற்றாக்குறை நிலவும். அப்போதெல்லாம், அவர்கள், இடுப்பில் துண்டை கட்டி கொண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். தண்ணீர் பற்றாக்குறை இப்போது இல்லை. காரணம், கூடுதலாக ஒரு நீர்த்தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. ஆயினும், அந்த தொட்டியில் இருந்து, வாளியில் இறைத்துதான் ஆக வேண்டும்.

* ஆழ்குழாய் கிணற்றில் இருந்தும், ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும் நீர் அனுப்பப்படுகிறது. ஆயினும், அதில் இருந்து, நீர் வரும் குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், குழாய்களில் நீரே வருவதில்லை.

* மாணவர்களுக்கு, குடிநீர் வழங்க, இரண்டு சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயினும், அவை அவ்வப்போது, பழுதாகி விடுகின்றன. அதனால் மாணவர்கள், வேறுவேறு நீரை குடிப்பதால், அவர்களின் தொண்டையில் புண் வந்து விடுவதாக, குற்றம்சாட்டுகின்றனர்.

* மாணவர் விடுதிக்கு ஏறும் மாடி படிக்கட்டுகளில் மின் விளக்குகள் இல்லாத தால், குகை போல கும்மிருட்டாக காட்சியளிக்கின்றன.

* அறைகளில், துரு ஏறிய கட்டில்களும், காரை பெயர்ந்த தளமும், கடந்த பல ஆண்டுகளாக எப்படி இருந்தனவோ, இப்போதும் அப்படியே உள்ளன.

மீண்டும் பூட்டு!

இதற்கிடையே, காரை பெயர்ந்தும், விரிசல் விட்டும் உள்ள உணவறைக்கு பதில், புதிய உணவறை வேண்டும் என, பலகாலமாக வைக்கப்பட்ட கோரிக்கையின் பலனாக, கடந்த ஆண்டு, புதிய உணவறை கட்டப்பட்டது. ஒப்பந்ததாரருக்கும், பொதுப்பணி துறைக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால், அது பூட்டப்பட்டது. இதுகுறித்து, மாணவர்கள் கேட்ட போதெல்லாம், ஒப்பந்ததாரர் சாவி கொடுக்க மறுப்பதாக நிர்வாகத்தால் சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம், கல்லுாரி கல்வி துறை இயக்குனரால், ஒரு நாள், அந்த கட்டடம் விமரிசையாக திறக்கப்பட்டது. ஆனால், மேஜை, நாற்காலிகள், மின்விசிறிகள், அடுக்களை என, ஒரு உணவறைக்கு வேண்டிய, எந்த வசதியுமே இல்லாத அந்த அறையை திறந்து வைத்திருப்பதை விட, பூட்டி வைப்பதே மேல் என, நிர்வாகம் முடிவு செய்து, மீண்டும் பூட்டி விட்டது.

என்ன சொல்கிறார் கல்லுாரி முதல்வர்?

இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் பிரம்மானந்த பெருமாளிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: விக்டோரியா விடுதி கட்டடம், பாரம்பரிய கட்டடம். அதனால், அதை சரிசெய்வதற்கு, பல்வேறு தடைகள் இருக்கின்றன. அங்கு நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு, பொதுப்பணி துறைதான், பதில் சொல்ல வேண்டும். எங்களால் முடிந்த வரை, மாணவர்களின் நலன் கருதி, பொதுப்பணி துறையினரை அடிக்கடி தொடர்பு கொண்டு, பிரச்னைகளை சொல்லி வருகிறோம். இந்த பிரச்னைகளில், பெரும்பாலானவை, தற்காலிகமானவையே.

குடிநீருக்கு, தற்போது, 50 லிட்டர் அளவுக்கு சுத்திகரிக்கும் இயந்திரம் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு போதுமானதல்ல. அடிக்கடி, அதை பயன்படுத்துவதால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை அடைத்து கொள்கிறது. அதை சரிசெய்ய, ஒருமுறைக்கு ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த பிரச்னையை தீர்க்க, விரைவில், 250 லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட உள்ளது.

உணவறைக்கு தேவையான பொருட்களை வழங்குவதில், பொதுப்பணி துறை தாமதிப்பதால், உணவறை பூட்டப்பட்டிருக்கிறது. அது விரைவில், பயன்பாட்டிற்கு வரும். விடுதி வளாகத்தில், தார் சாலை, மைதானம் சமன்செய்தல் உள்ளிட்ட கோரிக்கை களை தொடர்ந்து, தொடர்புடைய துறைகளிடம் கோரிக்கை வைத்து வருகிறேன். மாணவர்களுக்கு, கழிப்பறை பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும். இப்போது, புதிய கழிப்பறைகளுக்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us