அங்கன்வாடி மையங்களில் ஆய்வு கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
அங்கன்வாடி மையங்களில் ஆய்வு கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
UPDATED : ஆக 13, 2023 12:00 AM
ADDED : ஆக 13, 2023 10:51 AM
சென்னை:
அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யுமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.அவர் அனுப்பியுள்ள கடிதம்:
ஆய்வின்போது, மைய கட்டடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம், கட்டடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சாத்தியமான அபாயங்கள் அல்லது கட்டமைப்பு சிக்கல்களை ஆவணப்படுத்தி, அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பறைகள் சுகாதாரமாக, துாய்மையாக உள்ளதை உறுதி செய்ய வண்டும். கிருமி நாசினி தெளித்து பராமரிப்பது, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம். பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் வினியோகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காஸ் சிலிண்டர் வழியாக உணவு சமைப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை ஆரோக்கியம், ஊட்டச்சத்து, சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள், ஓவியங்கள் இடம்பெற வேண்டும். உணவு மற்றும் சத்து மாவு உட்கொள்வதை, அவசியம் கவனிக்க வேண்டும். முன்பருவ பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் வருகைப் பதிவேட்டை, ஆய்வு செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை பார்க்க வேண்டும். குழந்தைகளை எடையிடும் இயந்திரம், நல்ல நிலையில் உள்ளதா என்பதை, அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். சத்து மாவு, தேவைக்கேற்ப இருப்பு உள்ளதா என்பதையும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள், அக்மார்க் தரத்தில் உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு சத்து மாவு, அதுகுறித்த கையேடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் உணவு குறித்த விபரங்களை சேகரித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, அரசுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
