UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 05:47 PM
சென்னை:
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், பன்முக திறனை வெளிக்கொணர்வதற்காக, 33 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன், மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி கல்வித் திறனும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 420 பள்ளிகள் உள்ளன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில் படித்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொது தேர்வுகளில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள், 80 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.இதைத்தொடர்ந்து, மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்துதல், ஆங்கில வழிக்கல்வியை மேம்படுத்துதல், பன்முக திறனை வெளிக்கொண்டு வருதல் உள்ளிட்டவற்றை தன்னார்வ அமைப்புகள் வாயிலாக மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.இதுவரை விருப்பமுள்ள அமைப்புகள் தாமாக முன்வந்து, மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றன. அவற்றை ஒழங்குபடுத்தும் வகையில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 33 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் மேம்படுத்த உள்ளது.இது குறித்து, மேயர் பிரியா கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்க, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன், இடைநிற்றலை தவிர்க்கவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புது கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.அளிக்கப்படும் பயிற்சிகள்!
● கற்றலில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன● பருவ வயது குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல், வாழ்க்கை திறன் கல்வி குறித்த பயிற்சி வகுப்புகள், மூன்று கட்டங்களாக கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாட வகுப்புகள் நடைபெறும்● மாணவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்கான பயிற்சி, சிக்கல் தீர்க்கும் திறன், விழிப்புணர்வு வகுப்புகள், நிஜ வாழ்க்கை சவால்களை எதிர்கொள்வதற்கான பயிற்சி, பன்முக திறன்களை வெளிக் கொண்டு வருவதற்கான பயிற்சி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.ஆசிரியர்களுக்கும்...● நவீன வகுப்பறைகள் மற்றும் கல்வி கற்பித்தல் பயிற்சி வகுப்புகள், வாழ்க்கை திறன் பயிற்சிகள், மாணவ - மாணவியரை உறுதியான, பாதுகாப்பான சமுதாயமாக உருவாக்குவதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும்● மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்கு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்படும். மேலும், தொழில் வழிகாட்டுதல் பயிற்சி, மாணவர்களின் பாஸ்பர நன்மை குறித்த பயிற்சி, உடற்பயிற்சி மற்றும்பல்வேறு திறன் மேம்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.
