நீர் நிலைகளில் மாணவர்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
நீர் நிலைகளில் மாணவர்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 06:57 AM
சிவகாசி:
மாவட்டத்தில் நகர், கிராம பகுதி பள்ளி மாணவர்களுக்கு மழைக்காலங்களில் நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்து பள்ளிகள், பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்படும்.மாவட்டம் முழுவதுமே நகர், கிராம பகுதிகளில் பரவலாக மழை பெய்து அணை, கண்மாய், குளம், தெப்பம், கிணறு, ஊரணி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வருகின்றது. இன்னும் பருவமழை இருப்பதால் கண்மாய் போன்ற நீர் நிலைகளில் அதிகளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. தண்ணீர் வந்தால் இவைகளில் மீன்பிடிக்க, குளிக்க மாணவர்கள் ஆர்வமாக கிளம்பி விடுகின்றனர். இவர்கள், பள்ளி விடுமுறை நாட்களில் இது போன்ற நீர்நிலைகளுக்கு சென்று விடுகின்றனர். அங்கு விளையாட்டுத்தனமாக குளிக்க, மீன்பிடிக்க என உற்சாகமாக இருக்கின்றனர். நீர்நிலையின் ஆழம் இவர்களுக்கு தெரிவதில்லை. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நீச்சலும் தெரிவதில்லை. இதனால் தப்பித்தவறி கண்மாய், குளம், ஊரணி போன்ற நீர்நிலைகளில் விழுபவர்கள் நீச்சல் தெரியாமல் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.கடந்த மழை சீசனில் சிவகாசியை சேர்ந்த பள்ளி மாணவன் வடமலாபுரம் அருகே எதிர்பாராமல் தண்ணீரில் விழுந்து இறந்து போனார். சமீபத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற திருத்தங்கல் மாணவர் ஒருவர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது போன்ற அசம்பாவிதங்கள் மாவட்டம் முழுவதுமே ஆங்காங்கே நடக்கிறது. வருங்காலங்களில் இது போன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர் தங்களது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் அவர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும். விளையாட்டுத்தனமாக செய்யும் செயலால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள் இதற்காக தனி வகுப்பு எடுத்தால் மிகவும் நல்லது. மாவட்ட நிர்வாகமும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
