உயர் கல்விக்கு முக்கியத்துவம் வி.ஐ.டி., வேந்தர் வலியுறுத்தல்
உயர் கல்விக்கு முக்கியத்துவம் வி.ஐ.டி., வேந்தர் வலியுறுத்தல்
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:40 AM
சென்னை:
மத்திய, மாநில அரசுகள், உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, வேலுார் வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் கூறினார்.காட்பாடி வி.ஐ.டி., பல்கலையில், இந்திய சமூகவியல் சங்கத்தின், 48வது அகில இந்திய சமூகவியல் மாநாடு நடந்தது. அதில், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 1,100 பேர் பங்கேற்றனர். மாநாட்டை, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் துவக்கி வைத்து பேசியதாவது:
உலகில் நம் நாட்டை தவிர, வேறு எந்த நாட்டிலும் ஜாதி இல்லை; இது ஆபத்தானது. இன்னும் ஐந்தாண்டுகளில் மக்கள்தொகை பெருகி விடும். நாம் இப்போது விவசாய நிலங்களை இழந்து வருகிறோம். இயற்கை பேரிடரில் இருந்து நாம் மீள்வதற்கு, தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் பயன்படுத்த வேண்டும். இங்கு, 47,000 பேர் படிக்கும் நிலையில், 800 பேர் தான் அரசுகளின் உதவித் தொகையை பெறுகின்றனர்.நாட்டில், 14 கோடி பேர் உயர் கல்விக்கான தகுதி பெற்றிருந்தும், நான்கு கோடி பேர் தான் கற்கின்றனர். உயர் கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்தால் தான் நம் நாடு வளரும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன், இந்திய சமூகவியல் சங்க தலைவர் அபாசந்தன், துணைத் தலைவர்கள் சங்கர், செல்வம், பல்கலை துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், டீன் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.